ஐபிஎல் 16 வது சீசன் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய 23 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா, ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, கில் மற்றும் சுதர்சன் அணிக்கு வலு சேர்த்த நிலையில் சுதர்சன் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் தங்களது அதிரடி ஆட்டத்தால் பந்துகளை பறக்கவிட்டனர்.
முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரியான் பராக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில், 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஷிம்ரோன் ஹெட்மேயர், அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 60 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மேயர் 26 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 56 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
மு.வா.ஜெகதீஸ் குமார்