தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் கடைசி வரை உறுதியுடன் விளையாடியானாலும், அவர் செய்த ஒரு தவறு இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கெனவே நடந்த டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட மழையால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டாஸில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மில்லர், கிளாசன் அதிரடி ஆட்டம்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்கவீரர்களாக களமிறங்கிய மாலன் (22) மற்றும் டி காக் (48) ஆகியோர் நிதானமாக ஆடினர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பவுமா வழக்கம்போல் 8 ரன்களில் போல்டாகி வழக்கம் போல் சொதப்பினார்.
பின்னர் அதிரடியாக ஆடிய மில்லர் 63 பந்துகளில் 75 ரன்களும், கிளாசன் 65 பந்துகளில் 74 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தொடக்கம் தடுமாற்றம்!
இதனைதொடர்ந்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களம் கண்ட கேப்டன் தவான் 4 ரன்களிலும், சுப்மன் கில் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களை தொடர்ந்து கெய்க்வாட் (19 ரன்கள்) இஷான் கிஷன் (20 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது.
ஸ்ரேயாஷ் அய்யர் அரைசதம்!
இதனையடுத்து தடுமாறிய அணியை தட்டி தூக்கும் முயற்சியில் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடினர்.
இருவரும் அவ்வபோது பவுண்டரி, சிக்ஸர்களாக பந்துகளை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 118 ஆக இருந்த நிலையில், அரைசதம் அடித்து ஸ்ரேயாஸ் அய்யர் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் அணியை வெற்றிப்பெற வைக்க வேண்டிய முழு பொறுப்பும் சஞ்சு சாம்சன் மேல் குவிந்த நிலையில் பொறுப்புடன் விளையாடினார்.
இதற்கிடையே களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் எப்படியும் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் 33 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார்.
தோல்விக்கு காரணமான 2வது ரன்!
இந்நிலையில் கடைசி 12 பந்துகளில் இந்திய அணி வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருக்க, மறுமுனையில் சஞ்சு சாம்சன் நின்றிருந்தார்.
முதல் 2 பந்துகளையும் வீண் செய்த ஆவேஷ் கான், 3வது பந்தை தூக்கி அடிக்க, சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கில் நின்றிருக்கலாம்.
ஆனால் அதில் 2 ரன்கள் எடுக்க, அடுத்த 3 பந்துகளுக்கும் அவர் நான் ஸ்ட்ரைக்கிலே நிற்க நேரிட்டது. ஸ்ட்ரைக்கில் வந்த ஆவேஷ்கான் அடுத்த 2 பந்துகளை வீண் செய்ததோடு விக்கெட்டையும் பறிகொடுத்தார்.
முக்கியமான இந்த ஓவரில் கூடுதலாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு கடைசி வரை சாம்சன் நான் ஸ்ட்ரைக்கிலே இருந்ததால் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
கடைசி வரை போராடிய சஞ்சு!
இதனால் கடைசி ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இருப்பினும் ஆட்டத்தை விட்டு கொடுக்காத சஞ்சு சாம்சன், முதல் 3 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என்று அடிக்க, கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால் அதில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
கடைசி வரை இந்திய அணியை வெற்றி பெற வைக்க உறுதியுடன் போராடிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதே வேளையில், 38வது ஓவரில் சிங்கிள் மட்டுமே எடுத்திருந்தால், இந்திய அணி தற்போது வெற்றி பெற்றிருக்கும் என்றும், அவரது தவறான முடிவே தோல்விக்கு காரணம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இலவச திட்டங்கள் : மத்திய அரசு மீது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டம்!
”யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும்” – சசிதரூர்