இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணிக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு முதல் முதலில் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான ஏலம் மும்பையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் எதிர்பார்த்ததை விட அதிக விலையில் ஏலம் எடுக்கப்பட்டனர்.

முதல் சீசன் ஏலம் என்பதால் குறைந்த விலையில் ஏலம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் பெரும் திருப்பமாக அமைந்தது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஹர்மன் பிரீத்-ஐ 1.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷபாலி வர்மாவை 2 கோடிக்கு வாங்கியது. இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி வெளிநாடு வீராங்கனைகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக ஏலம் நிறைவுபெற்ற நிலையில் ரசிகர்களது எதிர்பார்ப்பு முழுவதும் போட்டியை எதிர்நோக்கித் தான் இருக்கிறது. இதனிடையே மகளிர் ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், “பெண்களுக்கான இந்திய விளையாட்டுகளில் முன்னோடி, ஒரு யூத் ஐகான், அவரது வாழ்க்கை முழுவதும் தைரியமாகத் தடைகளை உடைத்து விளையாடிய ஒருவர், மற்றும் களத்திற்கு வெளியேயும் ஒரு சாம்பியன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாகச் சானியா மிர்சாவை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
கிரிக்கெட் அணிக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்ட சானியா மிர்சா, “இது எனக்கு மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் உள்ளது. நான் ஓய்வு பெற்றதற்குப் பிறகு இளம் பெண்களுக்கு விளையாட்டு அவர்களுக்கு முதன்மையாக இருக்க உதவி புரிய நினைத்தேன்.
அடுத்த தலைமுறைக்கு அவர்களது இலக்குகளை அடைய உதவியாக இருக்க நினைக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன். அணியை வலிமையாக்க ஆலோசனைகளை வழங்குவேன். பெண்கள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஐபிஎல் தொடரைக் கொண்டு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
ஏராளமான பெண்கள் விளையாட்ட தங்களது கெரியராக எடுத்துக் கொள்ள முன்வருவார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
6 கிராண்ட்ஸ்லாம், மத்திய அரசின் பத்ம பூஷன் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சானியா மிர்சா சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் தொடருடன் தனது ஓய்வை அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவர் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
CUET நுழைவுத் தேர்வு: கொரோனா பாஸ் மாணவர்களுக்கு விலக்கு!
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் கள ஆய்வு!