ஆஸ்திரேலியா ஓபன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா – போபண்ணா ஜோடி!

விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த மாத தொடக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா ஓபன் அவரது கடைசி கிரண்ட்ஸ்லாம் தொடராக மாறியுள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா மகளிர் இரட்டையர் பிரிவில் முதலில் விளையாடிய சானியா மிர்சா – கஜகஸ்தானின் அன்னா டன்னிலினா ஜோடி இரண்டாவது சுற்றுடன் வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோடி சேர்ந்த சானியா மிர்சா தற்போது கலக்கி வருகிறார்.

காலிறுதியில் இந்திய ஜோடியை எதிர்த்து விளையாடிய ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஸ்பெயின் ஜோடி ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே போட்டியில் இருந்து விலகினர்.

அதனால் சானியா – போபண்ணா ஜோடி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது.

அதன்படி இன்று நடந்த அரையிறுதியில் இந்திய ஜோடியானது 7-6, 6-7 (10-6)என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தியது.

இதன்மூலம் சானியா-போபண்ணா ஜோடி தங்களின் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்.

முன்னதாக இருவரும் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிவரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் சானியா, தனது 3வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக 2009ம் ஆண்டு மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் போட்டியிலும், 2016ம் ஆண்டு மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியானது நாளை மறுநாள்(ஜனவரி 27) மெல்போர்னில் உள்ள பிரபல மார்க்ரெட் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தடை ரத்து : உயர்நீதிமன்றம்

கமலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.