ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன் என்று சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கர்ரன் படைத்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 23) கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை , பெங்களூரு, சென்னை, ராஜஸ்தான், லக்னோ, பஞ்சாப் ஆகிய அணிகள் சாம் கர்ரனை ஏலம் எடுக்க முயன்றனர்.

இதனால் அவரது ஏலத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இறுதியில் பஞ்சாப் அணி 18.5 கோடி ரூபாய்க்கு சாம் கர்ரனை ஏலம் எடுத்து தன் வசப்படுத்தியது.
இதனால் ஐபில் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கர்ரன் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிசை கடந்த 2021-ஆண்டு ராஜஸ்தான் அணி 16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததே அதிக தொகையாக இருந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரில் அறிமுகமான சாம் கர்ரன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்து சாம் கர்ரன் கூறுகையில், “ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய நாள் இரவு நான் சரியாக தூங்கவில்லை. ஏலம் எப்படி நடக்கப்போகிறது என்று எனக்கு சற்று பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஏலம் நடந்தபோது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன்.

ஆனால், நான் நல்ல ஏலத்தொகைக்கு போனது எனக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிமுகமான பஞ்சாப் அணிக்கே மீண்டும் செல்கிறேன். பஞ்சாப் அணிக்கு மீண்டும் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
பஞ்சாப் அணியில் சில இங்கிலாந்து அணி வீரர்கள் என்னுடன் இணைவார்கள் என்று காத்திருக்கிறேன். இதனை நான் ஒரு பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஏலத்திற்கு முன்பாக என்னுடைய மனதில் பல விஷயங்கள் ஓடியது. அதனை எல்லாம் ஏலத்தின் முடிவு மாற்றியுள்ளது. இந்தியாவிற்கு நான் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
“இப்படி ஒரு அழகா?” : சீதாவின் போட்டோ வைரல்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!