தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற 2வது லீக் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
20 ஓவர் இறுதியில் சேப்பாக் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. சேப்பாக் அணியில் ரஞ்சன் பிரதோஷ் பால் அரைசதம் கடந்து 1 சிக்சர் 12 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்திருந்தார்.
சேலம் அணியில் அதிகபட்சமாக சன்னி சந்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சேப்பாக் அணி சார்பில் பாபா அபராஜித், விஜி அருள், ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனிடையே சேப்பாக் அணி விளையாடிய இன்னிங்ஸின் கடைசி ஓவரின் ஒரே பந்தில் 18 ரன்கள் கொடுத்த சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சேப்பாக் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சய் யாதவ் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சேலம் அணியில் கடைசி ஓவரை வீசிய அபிஷேக் டன்வர் கடைசி பந்தில் 17 ரன்கள் எடுத்திருந்த சஞ்சய் யாதவை கிளீன் போல்ட்டாக்கினார்.
ஆனால் அது நோபால் என்று நடுவர் அறிவித்ததால் மீண்டும் அவர் வீசிய ஃப்ரீ ஹிட் ஃபுல் டாஸ் பந்தை சஞ்சய் யாதவ் சிக்ஸராக தெறிக்க விட்டார். ஆனால் அதுவும் நோபால் என்று நடுவர் அறிவிக்க மீண்டும் கடைசி பந்தை வீசினார்.
இந்த முறை சிறப்பாக பந்துவீசியதால் சஞ்சய் யாதவால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் அபிஷாக் தன்வர் வெள்ளைக் கோட்டை தாண்டி பந்து வீசியதால் மீண்டும் நோபால் என்று அறிவித்து ஃபிரீ ஹிட் வழங்கப்பட்டது.
இதனால் மிகவும் பதற்றமடைந்த அபிஷேக் தன்வர் ஒய்ட் பால் வீசியதால் மீண்டும் நோபால் என்று அறிவிக்கப்பட்டது. இறுதியில் யார்கர் லென்த்தை தவற விட்டு அவர் வீசிய பந்தை மீண்டும் சஞ்சய் யாதவ் சிக்ஸராக பறக்க விட்டு சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
அந்த வகையில் கடைசி ஓவரில் 1, 4, 0, 1, நோபால் (1),1 என ஏற்கனவே முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் கொடுத்திருந்த அபிஷேக் தன்வர் கடைசி ஒரே ஒரு பந்தில் மட்டும் நோபால் (1), 6, நோபால் (1), 2, நோபால் (1), ஒய்ட் பால், 6 என 18 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
வரலாற்றில் இதற்கு முன் நிறைய பவுலர்கள் ஒரே ஓவரில் நிறைய ரன்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால் ஒரே ஒரு பந்தில் அதிக ரன்கள் ஹாட்ரிக் நோபால்களை வீசி 18 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. மேலும் ஒரே பந்தில் 18 ரன்களை வழங்கிய சேலம் வள்ளல் என்று ரசிகர்கள் இவரை குறிப்பிட்டு வருகின்றனர்.
மோனிஷா
செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்!
செந்தில் பாலாஜியை ‘கைது’ காட்டும் அமலாக்கத்துறை! மருத்துவமனைக்கு வந்த நீதிபதி