Sakshi Malik announces sudden retirement
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (டிசம்பர் 21) அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.
அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் ஏப்ரலில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு கடந்த ஆக்ஸ்ட் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் வெற்றி பெற்ற நிலையில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்!
இதனை ஏற்க மறுத்து சாக்ஷி மாலிக் தற்போது மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “என் போன்ற வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்ட பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தினை நாங்கள் எங்கள் இதயத்துடன் நடத்தினோம். இறுதியில், நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். போராட்டங்களின் போது எங்களுக்கு ஆதரவாக வந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த நிலையில் பிரிஜ் பூஷண் சிங்கின் வணிகப் பங்குதாரரும் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் WFI இன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” என்று வேதனையுடன் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற கோரிக்கை!
நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக சாக்ஷி மாலிக் கருதப்படுகிறார். 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அவர் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென ஓய்வு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டுமென்று சமூக மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதிய குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம் : அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி!
நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!
Sakshi Malik announces sudden retirement