குறைந்தபட்சம் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்காவது அன்பும் மரியாதையும் கிடைக்கிறதே என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்று 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது. இதனை நாடு முழுவதும் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், தனது ட்விட்டர் பதிவில், “எம்.எஸ்.தோனி மற்றும் சிஎஸ்கேவிற்கு வாழ்த்துக்கள். குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
கடந்த மே 28 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத் திறப்பு விழாவின் போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தர தரவென இழுத்து சென்றும் தூக்கி சென்றும் கைது செய்தனர்.
இதற்கு பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் இன்று (மே 30) மாலை வீசவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தங்களது போராட்டம் இன்னும் தொடருவதாக மன வேதனையுடன் பதிவிட்டுள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
மோனிஷா
பதக்கங்களை கங்கையில் வீசுவோம்: மல்யுத்த வீரர்கள்
சிஎஸ்கே வெற்றிக்கு யார் காரணம்? அமைச்சருக்கு அண்ணாமலை பதில்!