ரஞ்சி கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன், சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராய் பரிணமித்து வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில், மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார்.
அந்த அணிக்காக இரண்டு போட்டிகளில் ஆடிய அவர், சிறந்தளவில் கோலோச்சவில்லை. அதுபோல், 2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, ரூ. 20 லட்சத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அர்ஜுன், ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் காரணமாக, எந்த ஆட்டத்திலும் விளையாடாமல் நாடு திரும்பினார்.
இதற்கிடையே கடந்த வருடம் மும்பை ரஞ்சி அணியிலும் இடம்பிடித்திருந்தார், அர்ஜுன். தொடர்ந்து, 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு அர்ஜுனை மீண்டும் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் அதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படாததால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்கு சென்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தொடங்கிய சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர், பந்துவீச்சில் ஜொலிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, அவர் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் கோவா அணி வெற்றி பெற்றிருந்தது. இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, கோவா அணியில் ஜொலிக்கும் டெண்டுல்கர் மகன்! என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கோவா அணியில் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர், அசத்தி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதல் நாளன்று (டிசம்பர் 13) கோவா அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பிரபுதேசாய் 81, அர்ஜுன் டெண்டுல்கர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று (டிசம்பர் 14) அந்த இரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்கள். 23 வயது அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே 177 பந்துகளில் சதமடித்து அசத்தி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தது போல அவரது மகனும் சதமடித்துள்ளார்.
கோவா அணி 140 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பிரபுதேசாய் 172, அர்ஜுன் தெண்டுல்கர் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
ஜெ.பிரகாஷ்
டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!