பெங்களூரை தோற்கடித்த குஜராத்: கிண்டல் செய்த சச்சின்

விளையாட்டு

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (மே 21) கடைசி லீக் போட்டியில் பரிதாபமாக தோற்ற பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளதால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த குஜராத் அணியை எதிர்கொண்டது.

மழைக் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்திய விராட்கோலி நடப்பு தொடரில் தனது 2வது  சதத்தை (101*) பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 7வது சதத்துடன் அதிக சதம் விளாசிய கெயிலின் சாதனையை முறியடித்தார்.

மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் (104*) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் (53) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தனர்.

குஜராத் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் சொதப்பலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பெங்களூரு அணி இந்த பரிதாபமான தோல்வியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

அதே நேரத்தில் 16 புள்ளிகளுடன் காத்திருந்த மும்பை அணி 10வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து மும்பை அணிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் கிரிக்கெட் உலகின் சச்சின் டெண்டுல்கரும் இணைந்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் என்ற முறையில் தனது அணியின் வெற்றியை கொண்டாடும் வேளையில், பெங்களூரை தோற்கடித்த குஜராத் வீரர் சுப்மன் கில்லுக்கும் அவர் பாராட்டு தெரிவித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜப்பானில் தமிழ் திரைப்படங்களுக்கு விருது!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

+1
2
+1
2
+1
1
+1
1
+1
5
+1
3
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *