தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இவற்றில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. 1-1 என டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், 2-1 என ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26 அன்று துவங்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் இளம் நட்சத்திரம் ருதுராஜ் கெய்க்வாட்டும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், 5 போட்டிகளில் 223 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் முதல் 2 ஆட்டங்களில் ருதுராஜ் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்த நிலையில், 2வது போட்டியில் பீல்ட்டிங்கின் போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு எதிர்பாராத விதமாக மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 3வது போட்டியில் அவர் விளையாடாத நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரனை இந்திய கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது.
இதுமட்டும் இல்லாமல், தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் இந்தியா ஏ அணி 2 அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், 2வது போட்டிக்கான இந்தியா ஏ அணியில் இருந்து, ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விடுவிக்கப்பட்டு ரஜத் படிதார், ரிங்கு சிங், சர்பிராஸ் கான் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தேசியப் பேரிடர் இல்லையா? நிதி கொடுக்க முடியாதா? நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா? – மக்கள் கருத்து!
விரைவில் வட சென்னை 2: வெற்றி மாறன் அப்டேட்!