விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து ருதுராஜ் கெய்க்வாட் உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியில் இன்று (நவம்பர் 28) நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதி போட்டியில் மராட்டியம் மற்றும் உத்தரப் பிரதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் ஒரு முனையில் நிலைத்து ஆட மறுமுனையில் வந்த வீரர்கள் சிறு சிறு பாட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
துவக்க வீரர் ராகுல் 9, பச்சோ 11, பாவனே 37 மற்றும் அசிம் காசி 37 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இதனால் ஆட்டத்தின் நடுவில் மாகாராஷ்டிரா அணி திணறியது.
ஆனால் தொடக்கம் முதலே நிலையாக நின்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ், சதமடித்த பிறகு தொடர்ந்து ரன்களை குவித்து வந்தார்.
150 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் விளையாடி வந்த ருதுராஜ் 49 ஓவரில் முதல் 4 பந்துகளையும் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் 4வது பந்து நோபால் ஆனது. அதற்கு மாற்றாக வீசப்பட்ட ‛ப்ரீ-ஹிட்’ பந்தையும் சிக்சராக பறக்கவிட்டார்.
இதனால் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளையும் ருதுராஜ் சிக்சர் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து வீசப்பட்ட கடைசி பந்தையும் ருதுராஜ் சிக்சர் அடித்து அதிரடி காட்டினார்.
இதனால் ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து 43 ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
50 ஓவர் இறுதியில் ருதுராஜ் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்படும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்னர் இந்தாண்டு விஜய் ஹசாரே தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் எடுத்திருந்தார்.
மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.
ருதுராஜ் கெய்வாட் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கூடங்குளத்தால் பாதிப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
மூன்று காலகட்ட கதைகளத்தில் ‘பாம்பாட்டம்’!