ருதுராஜ் அரைசதம்: குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

Published On:

| By Jegadeesh

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ப்ளே ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

ஒற்றை இலக்க ரன்னில் இருந்தபோது கெய்க்வாட் கேட்ச் ஆனார். எனினும், அது நோ பால் என அறிவிக்கப்பட்டது.

ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மோஹித் பந்துவீச்சில் டேவிட் மில்லரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஷிபம் துபே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் எடுத்தனர்.

19 வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் எடுக்க , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

தற்போது 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel