Hardik Pandya step Brother Arrested!

ரூ.4.2 கோடி மோசடி : ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!

விளையாட்டு

ரூபாய் 4.2 கோடி மோசடி செய்த வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் இன்று (ஏப்ரல் 11) கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் டி-20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் இவரையும், அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவையும் அவர்களது பெரியப்பா மகன் ஏமாற்றி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து பாலிமர் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் தலா 40 சதவீதம் முதலீடு செய்தனர். வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றார்.

Hardik Pandya step Brother Arrested!

அவர்கள் கொடுத்த பங்குகளுக்கு ஏற்ப லாபம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஒப்பந்தத்தை மீறி தனியாக தான் தொடங்கிய ஒரு நிறுவனத்திற்கு லாபத்தை திருப்பி உள்ளார் வைபவ் பாண்டியா.

மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33.3 சதவீதமாக மாற்றி இருக்கிறார். அத்துடன் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

இப்படி மொத்தமாக 4.2 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு (EOW) காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வைபவ் பாண்டியா மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி பாண்டியா சகோதரர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திகார் ஜெயிலில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன குட் நியூஸ்… கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0