மான்செஸ்டர் அணியில் இருந்து விலகிய போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டோ ஆண்டுக்கு சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்துடன் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்கு விளையாட ஒப்பந்தம் ஆகி இருப்பது அனைவரும் அறிந்ததே.
ரொனால்டோவின் வருகையை முன்னிட்டு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் கடந்த 2ம் தேதி பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அடுத்த நாள் அல்-நாசர் கிளப்பின் சொந்த மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 6ம் திகதி அல்-நாசர் கிளப்பிற்காக முதல் போட்டியில் ரொனோல்டோ களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்காக இந்த போட்டியை காண சுமார் 28,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையும் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் நவம்பர் மாதம் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் 2 போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருப்பது அதற்கு பிறகு தான் அல்-நாசர் கிளப்புக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்றைய போட்டியில் தனது புதிய அணிக்காக ரொனால்டோவால் களமிறங்க முடியவில்லை.
இந்நிலையில் தான் அல் நாசர் அணி தனது சமூகவலைதள பக்கங்களில் ரொனால்டோவின் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சவுதி புரோ லீக்கில் அல்-தாயி அணிக்கு எதிராக அல் நாசர் கிளப் அடித்த 2வது கோலை பயிற்சி அறையில் இருந்தபடி ரொனால்டோ உற்சாகமாக கொண்டாடுகிறார்.
இதன்மூலம் தான் அணியில் இடம்பெறாவிட்டாலும், தான் எங்கிருந்தாலும் சக வீரர்களை உற்சாகப்படுத்துவேன் என்பதை ரொனால்டோ உறுதிபடுத்தியுள்ளார்.
நேற்றைய போட்டியில் அல்-நாசர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. அல்-ஷபாப் நான்கு புள்ளிகள் இடைவெளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரொனால்டோ தன்னுடைய புதிய கிளப்பிற்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மண்ணில் புதைந்து வரும் நகரம்: தனுஷ்கோடியை நினைவுபடுத்தும் ஜோஷிமத்
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?: நிதிஷ் குமார்