ஐந்து உலக கோப்பை கால்பந்து தொடரில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்கியது.
நேற்று குரூப் எச் பிரிவில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் அணி, கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தினார்.
சர்வதேச கால்பந்து போட்டியில் ரோனால்டோ அடித்த 118 வது கோல் ஆகும்.

இதன் மூலம் ஐந்து உலக கோப்பை தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தியுள்ளார்.
ரோனால்டோவின் கடைசி உலக கோப்பை போட்டி என்பதால் போர்ச்சுகல் அணி மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
போர்ச்சுகல் அணிக்காக 2003 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரோனோல்டோ, 2005 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியில் கிரீஸ் அணிக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார்.
தனது 21 வயதில் 2006-ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானுக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார். இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈரானை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.
2010-ஆம் ஆண்டு தென் கொரியா கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோனோல்டோ தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இந்த கால்பந்து போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை போர்ச்சுகல் வீழ்த்தியது.
2014-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கானா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் 4 கோல்களை அடித்தார். ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட் ரிக் கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுவரை மெஸ்ஸி, பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் ஆகியோர் நான்கு உலக கோப்பை தொடர்களில் கோல்கள் அடித்திருந்தனர். கிறிஸ்டியோனோ ரொனால்டோ அவர்களின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

போர்ச்சுகல் அணியைப் பொறுத்தவரை முன்னாள் வீரர் யூசிபியோ உலக கோப்பை கால்பந்து தொடரில் 9 கோல்கள் அடித்ததே அந்த அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச கோலாக இருந்தது.
தற்போது 8 கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியோனா ரொனால்டோ கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் அந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெற்றது குறித்து கிறிஸ்டியானோ ரொனோல்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக கோப்பை ஆட்டத்தில் இது எங்களுக்கு மிக முக்கியமான வெற்றி.
இது முதல் படி மட்டுமே. எங்களின் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துகிறோம். போர்ச்சுகல் வலிமை பெறட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஆன்லைன் ரம்மி – தினம் தினம் 10 கோடி: கவர்னர் தள்ளும் மர்மம்!