சச்சின் தலைமையின் கீழ் நான் விளையாடிய அதே அணியில், எனது தலைமையின் கீழ் அவரது மகன் விளையாடுவது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நியாபகப்படுத்துவதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் 25வது லீக் போட்டியில் நேற்று (ஏப்ரல் 18) சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் (64), இஷான் கிஷன் (38), திலக் வர்மா (37) ஆகியோர் அடித்தனர்.
தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்
இந்த போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் 20ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார்.
அதில் 5 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை கைப்பற்றினார். இது ஐபிஎல் தொடரில் அவரது முதல் விக்கெட்டாக அமைந்தது.
இதனையடுத்து திரைபிரபலங்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கை ஒரு வட்டம்
போட்டிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “சச்சின் தலைமையின் கீழ் நான் விளையாடிய அதே அணியில், எனது தலைமையின் கீழ் அர்ஜுன் விளையாடுவது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நியாபகப்படுத்துகிறது.” என்றார்.
இது திருமலை படத்தில் நடிகர் விஜய் பேசும் ஒரு பஞ்ச் வசனத்தை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர் பேசுகையில், ”அர்ஜூன் டெண்டுல்கர் மூன்று வருடங்களாக இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் புரிந்து வைத்துள்ளார்.
அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் தனது திட்டங்களில் தெளிவாக இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
தொடர்ந்து அர்ஜுன் டெண்டுல்கர் போட்டி குறித்து கூறுகையில், “இன்று ஐபிஎல் லில் எனது முதல் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் திட்டங்களை வகுத்து பந்துவீசத்தான் விரும்புகிறேன். ஒயிட் யார்க்கர் வீசுவதுதான் எனக்கு பிடிக்கும். அதேபோல், லாங்கர் பவுண்டரி திசையில் பேட்டர்களை அடிக்கவிடும் அளவுக்குதான் நான் எப்போதும் பந்துவீசுவேன்.
இப்போட்டிக்கு முன் சச்சின் டெண்டுல்கர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். இன்று ஸ்விங் ஆனால், அது எனக்கு போனஸ். இல்லையென்றால், கூடுதல் முயற்சியுடன் பந்துவீச வேண்டும் என நினைத்தேன்.”என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!