டி-20 கிரிக்கெட்: முடிவுக்கு வருகிறதா விராட்-ரோஹித் பயணம்?

விளையாட்டு

டி-20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் பயணம் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2023 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த விராட் கோலிக்கும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரோஹித், கோலி ஆட்டம் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக 3 டி20 தொடர்களில் விளையாடவிருக்கிறது.

இதில் இன்று (நவம்பர் 23) தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட  இந்திய அணியில்  விராட், ரோஹித் இருவரின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதற்கிடையில் விராட், ரோஹித் இருவரும் ஒரு மாதம் விடுமுறையில் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி ஒருவேளை இவர்கள் விடுமுறையில் சென்றால் டிசம்பர் மாதம் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெற மாட்டார்கள். அதன்படி பார்த்தால் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி 20 தொடரில் விராட், ரோஹித் விளையாட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இதுகுறித்து, “உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்து விராட், ரோஹித் இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு (2024) டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் அவர்கள் இருவரும் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஒருவேளை ரோஹித் இந்திய அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேற விரும்பினால் ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக இருந்து வழி நடத்துவார்.  டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை  ரோஹித், விராட் எதிர்காலம் குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என பிசிசிஐ  வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டி20 போட்டிகளை பொறுத்தவரை 4000 ரன்களுக்கு அதிகமாக குவித்த வீரராக விராட்டும், அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய வீரராக ரோஹித்தும் திகழ்கின்றனர். எனவே இவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட், ரோஹித் இருவரும் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

த்ரிஷா சர்ச்சை: மன்சூர் அலிகானுக்கு போலீஸ் அவகாசம்!

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க: முத்தரசன்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *