ஐபிஎல் 2023 தொடரில் நேற்று (ஏப்ரல் 2 ) நடைபெற்ற 5 வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 171/7 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அந்த அணிக்கு ரோகித் சர்மா 1 (10), இசான் கிசான் 10 (12), கேமரூன் கிரீன் 5 (4), சூர்யகுமார் யாதவ் 15 (16) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.
அதனால் 48/4 என திணறிய அந்த அணியை இளம் வீரர்கள் நேஹல் வதேரே 21 (13) ரன்களும் திலக் வர்மா 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்களும் எடுத்து அணிக்கு ஓரளவு ரன்களை பெற்றுக்கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டு பிளேஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 73 (43) ரன்களும் விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (49) ரன்களும் எடுத்து 16.2 ஓவரிலேயே தங்கள் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
முன்னதாக இப்போட்டியில் மும்பை தோல்வியை சந்திப்பதற்கு அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக , ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா ஏற்கனவே கடந்த 2022 சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்டது புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் அவர் இந்த முதல் போட்டியிலேயே 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன்னில் அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி ஆட்டமிழந்து சென்றதால் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் வெறும் 1 ரன்னில் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் 50 முறை 1 – 5 ரன்களுக்குள் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அதன் படி, ரோகித் சர்மா 50 முறையும், தினேஷ் கார்த்திக் 44 முறையும், ராபின் உத்தப்பா 41 முறையும், சுரேஷ் ரெய்னா 40 முறையும் அவுட்டாகியுள்ளனர்.
அத்துடன் இப்போட்டியில் வெறும் 10.00 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் குறைந்தது 10 பந்துகளை எதிர்கொண்ட ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்
ரோகித் சர்மா : 10.00 பெங்களூருக்கு எதிராக, 2023
ரோகித் சர்மா : 15.38 – டெல்லிக்கு எதிராக, 2022
ரோகித் சர்மா : 25.22 – கொல்கத்தாவுக்கு எதிராக, 2022
கடந்த ஒரு வருடமாகவே சுமாரான ஃபிட்னஸ் காரணத்தால் அடிக்கடி காயமடைந்து பேட்டிங்கில் தடுமாறும் அவர் இதர அணி வீரர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமென முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் 1ரன்னில் அவுட்டானதை பார்த்த ரசிகர்கள் கேப்டன் தோனியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று ரோகித் சர்மாவை விமர்சித்து வருகிறார்கள்.
ஏனெனில் இன்னும் ஒரு சில மாதங்களில் 42 வயதை தொட காத்திருக்கும் தோனி கடந்த ஒரு வருடமாக எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமலேயே நல்ல பிட்னெஸ் காரணத்தால் இந்த சீசனின் முதல் போட்டியில் 14* (7) ரன்கள் எடுத்தார். இப்போதும் இளம் வீரரை போல் பிட்ன்ஸ் உடன் காட்சியளிப்பதால் ஃபிட்னஸில் ரோகித் சர்மாவுக்கு தோனி எவ்வளவோ பரவாயில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகாவீரர் ஜெயந்தி: முதல்வர் வாழ்த்து!