நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் – கில் ஜோடி அடுத்தடுத்து சதமடித்து பல்வேறு சாதனை படைத்துள்ளனர்.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
நியூசிலாந்து அணியை வைட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தீவிரப்படுத்தினர்.
அதன்படி நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
இருவரின் அரைசதத்துடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் குவித்த இந்தியா, 25 ஓவரில் 200 ரன்களை கடந்தது.

தொடர்ந்து இரு பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டிய நிலையில் கேப்டன் ரோகித் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 83 பந்துகளில் முதலாவதாக சதமடித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது ரோகித்தின் 30 ஆவது சதமாகும்.
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ரோகித்தை தொடர்ந்து அதே ஓவரிலேயே 13 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 72 பந்துகளில் சுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3வது சதத்தை பதிவு செய்துள்ளார் சுப்மன் கில்.

எனினும் அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா 101 ரன்களில் பிரெஷ்வெல் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த சுப்மன் கில்லும் 112 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை ரோகித் சர்மா – சுப்மன் கில் ஜோடி படைத்துள்ளது.
இந்த ஜோடியை தொடர்ந்து விராட் கோலி(36) மற்றும் ஹர்திக் பாண்டியா(54) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
‘சர்ச்சை மருத்துவர்’ ஷர்மிகாவுக்கு புது உத்தரவு பிறப்பித்த எம்.சி.ஐ!