Rohit Sharma: 2024 டி20 உலகக்கோப்பையின் ‘சூப்பர் 8’ சுற்றில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜுன் 24) இரவு நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, இந்திய அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, அந்த அணிக்கு ஒரு அதிரடி துவக்கத்தை வழங்கினார்.
மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4 சிக்ஸ்களுடன் 28 ரன்கள் குவித்த ரோகித் சர்மா, பேட் கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் 15 ரன்களை விளாசினார். இத்துடன் தனது அபார ஆட்டத்தில், ரோகித் சர்மா 5 சிக்ஸ்களுடன் 19 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து, மிட்சல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் மொத்தம் 8 சிக்ஸ்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸ்களை பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமின்றி, இந்த இமாலய இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார். இதுவரை 157 டி20ஐ போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 203 சிக்ஸ்களை விளாசியுள்ளார்.
இவருக்கு அடுத்து, 173 சிக்ஸ்களுடன் மார்ட்டின் கப்டில் 2வது இடத்திலும், 137 சிக்ஸ்களுடன் கிளென் மேக்ஸ்வெல் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர்களில், ரோகித் சர்மாவை அடுத்து 131 சிக்ஸ்களுடன் சூர்யகுமார் யாதவ் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இந்த 131 சிக்ஸ்களை சூர்யகுமார் யாதவ் வெறும் 66 போட்டிகளிலேயே குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி 121 சிக்ஸ்களுடன் இப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
பாஜக பின்னணியில் வந்த கலெக்டர்… கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
”சொந்த பிள்ளைகளால் பாரத மாதா முதுகில் குத்தப்பட்ட நாள்” : ஆளுநர் ரவி