INDvsWI: அடுத்தடுத்து சதம்… சாதனைகளை தகர்த்தெறிந்த ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி!

Published On:

| By christopher

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி அடுத்தடுத்து சதம் அடித்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த 12ஆம் தேதி டொமினிக்காவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்தும், 21 வயதான அறிமுக வீரர் ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.

முதல் போட்டி என்று ஜெய்ஸ்வாலுக்கும், மோசமான பார்ம் என்று ரோகித் சர்மாவுக்கும் நெருக்கடி இருந்த நிலையிலும் இருவரும் பொறுப்புடன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திணறி நிற்க, வெஸ்ட் இண்டீஸ் இன் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று தந்தது ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி!

தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜெய்ஸ்வால் தனது அறிமுக சர்வதேச போட்டியிலேயே முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். 215 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை கண்டார்.

இதன்மூலம் தவான், பிரித்வி ஷாவுக்கு பிறகு அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதம் கண்ட 3வது இந்திய தொடக்க வீரராக வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார் ஜெய்ஸ்வால்.

அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார்.  220 பந்துகளைச் சந்தித்த ரோகித் 10 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் இந்த சதத்தை அடித்தார். இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய தொடக்க வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் அடித்த சதமாக இது பதிவானது.

சதமடித்த சிறிது நேரத்தில் ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அதானிஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி  17 ஆண்டுகால சாதனையையும் தற்போது முறியடித்து இருக்கிறது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற பெருமையை வசீம் ஜாபரும், சேவாக்கும் வைத்திருந்தார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த ஜோடி  159 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

தற்போது ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி அதனை முறியடித்து முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய டெஸ்ட் வரலாற்றின் அடுத்த தசாப்தமாக பார்க்கப்படும் இந்த முதல் போட்டியிலேயே ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.

ரோகித்தை தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 36 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 143 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து, ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

மூன்றாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை 

மாபெரும் கனவோடு விண்ணில் பாயவுள்ள சந்திரயான் 3!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel