இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் சனகாவின் விக்கெட்டை ரோகித்சர்மா திரும்ப பெற்றதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கவுகாத்தியில் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
புத்தாண்டின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன. டாஸை இழந்தாலும், கேப்டன் ரோகித் சர்மா(83) மற்றும் சுப்மன் கில்(70) ஆகியோர் அதிரடியாக அரைசதம் அடித்ததுடன் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் குவித்தனர்.
அவர்களை தொடர்ந்து விராட்கோலி(112) சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 45வது சதத்தை பதிவு செய்தார். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 373 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் நிஷாங்கா அபாரமாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் வந்தவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய கேப்டன் சனகா (108*) ஒருநாள் போட்டியில் தனது 2வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
எனினும் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 306 ரன்களை எட்டியதால், 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது இந்தியா.
இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்திய ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
சனகா மன்கட் அவுட் வாபஸ்
கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். ஆட்டத்தின் 49.3 வது ஓவரின்போது 98 ரன்கள் எடுத்து எதிர் முனையில் சனகா நின்று கொண்டிருந்தார். அப்போது பந்துவீசுவதற்கு முன்னதாக கிரீஸை விட்டு வெளியேறிய சனகாவை, முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் ஆக்கினார். இதனால் சனகா கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இதனையடுத்து இது மூன்றாம் நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தாங்கள் அப்பீல் செய்ய விரும்பவில்லை என்றும், இதனை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து சனகா மீண்டும் களத்தில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சனகா ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி தனது சதத்தை பதிவு செய்தார்.
போட்டி முடிந்ததும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா, ”ஷமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது. சனகா அற்புதமாக விளையாடி சதத்திற்கு அருகே நின்றார். அவருடைய விக்கெட் எங்களுக்கு தேவை தான். ஆனால் மன்கட் முறையில் சனகா விக்கெட்டை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் அந்த அப்பீலை நாங்கள் திரும்ப பெற்றோம்.” என்று ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.
விமர்சிக்கும் இந்திய ரசிகர்கள்
எனினும் மன்கட் அப்பீலை ரோகித்சர்மா திரும்ப பெற்றதற்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசி அனுமதித்துள்ள ஒரு அவுட் முறையை ரோகித் பெற்றதன் மூலம், எதிர்காலத்தில் மன்கட் முறையில் விக்கெட் எடுக்கும் இந்திய வீரர்கள் விமர்சனத்திற்கு உள்ளாவர்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முன்னாள் வீரர்கள் பாராட்டு
அதே நேரத்தில் ரோகித் சர்மாவின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் சட்டம் அப்படிச் சொன்னாலும் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதற்காக ரோகித் சர்மாவுக்கு நன்றி! சிறந்த விளையாட்டுத் திறனை அவர் வெளிப்படுத்துகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் சனத் ஜெயசூர்யா, ”மன்கட் ரன் அவுட்டை எடுக்க மறுத்ததற்காக ரோஹித் ஷர்மாவின் ஸ்போர்ஸ்மேன்சிப் தான் உண்மையான வெற்றியாளர். நான் என் தொப்பியை அவருக்கு கொடுக்கிறேன்!” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு கிழக்கு தொகுதி: சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு!
3 நாட்களில் 2 இந்தியர்கள் செய்த வித்தியாசமான கின்னஸ் சாதனை