சிறுவன் பிங்கி ப்ராமிஸ்சை காப்பாற்றிய ரோஜர் ஃபெடரர்: அப்படி என்ன செய்தார்?

விளையாட்டு

12 வயதான இந்திய வம்சாவழி சிறுவனின் கனவை நனவாக்கி உள்ளார் உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தான் நடித்த பைரவா படத்தில், ” இன்னைக்கி நெறய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப் பழக்கம் என்கிட்ட இருக்கு… சொன்ன சொல்ல காப்பத்துறது!” என்று அவர் சொல்லும் பஞ்ச் வசனம் மிக பிரபலம். உண்மையில் உலகில் சாதனை படைத்த பல மனிதர்களிடம் உள்ள தலைசிறந்த குணம் ’சொன்ன சொல்லை காப்பாற்றி செய்து காட்டுவது தான்! அதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரரின் சமீபத்திய செயல்!

ஃபெடரர் அளித்த வாக்குறுதி!

2017ம் ஆண்டு நடந்த யுஎஸ் ஓபன் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் ரோஜர் ஃபெடரர் பங்கேற்றார். அப்போது ஜிசோ (Zizou) என்ற 6 வயது சிறுவன், ஜாம்பவான் ஃபெடரருக்கு சவால் விடுத்தார். அவர், “வணக்கம் மிஸ்டர் ஃபெடரர். தயவு செய்து எட்டு, ஒன்பது வருடங்கள் நீங்கள் தொடர்ந்து விளையாட முடியுமா? அதனால் நான் ப்ரோ வீரராகும்போது உங்களுடன் விளையாட முடியும்..” என்று கேட்டார். ஜிசோவின் பேச்சைக் கேட்டு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, “ஆம்” என்று ரோஜர் பெடரர் பதிலளித்தார். ”சத்தியமாகவா?” என்று சிறுவன் சினுங்கியபடி மீண்டும் கேட்க… “Yes.. Pinky promise” என்று சிரித்தபடி பதிலளித்தார் ஃபெடரர்…

alt="Roger Federer made the dream"

அமெரிக்காவில் ஜிசோ!

அதன்பின் 5 வருடங்கள் கடந்துவிட்டன… காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட அந்த 6 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஜிஸோ என்று அழைக்கப்படும் இஸ்யான் அஹ்மத் (Izyan Ahmad) இப்போது அமெரிக்காவில் 12 வயது டென்னிஸ் வீரராக பயிற்சி பெற்று வருகிறார். மேலும் 14 வயதுக்குட்பட்டோருக்கான பல டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரோஜர் ஃபெடரரின் சொந்த நாடான சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரத்தில் உள்ள பிரபல டென்னிஸ் கிளப்புக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, ஜிசோவின் பெயர் சொல்லி அழைத்த அந்த கிளப்பின் ஊழியர் ஒருவர், அவருக்கு இருக்கையை காட்டி சிறுவனை அமர வைத்தார். ’எனது பெயர் இவர்களுக்கு எப்படி தெரியும்?’ என்று ஆச்சரியப்பட்டார் ஜிசோ. பின் அந்த ஊழியர், ”இந்த கிளப்பின் மேனஜர் உங்களது தீவிர ரசிகர். அவர் உங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படுகிறார்.” என்று கூறினார். ”என்னது என் கூடவா?” என்று எதும் புரியாமல் கேட்ட ஜிசோ பின் செல்பிக்கு சம்மதம் தெரிவித்தார்.

alt="Roger Federer made the dream"

அப்போது அங்கு வந்த பெண்மணி ஒருவர் சிரித்த முகத்துடன் ஜிசோ அருகே வந்து “ நான் உங்களின் தீவிர ரசிகை” என்று கூறுகிறார். ஒரு நிமிடம் ஜிசோவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அந்த பெண்மணி தான் அணிந்திருந்த செஃப் சட்டையை கழற்ற, அதற்குள் தனது முகம் பொறித்த டீசர்ட்டை கண்டு திகைப்பில் நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் ஜிசோ.

ஷாக் கொடுத்த ரோஜர் ஃபெடரர்

இதற்கிடையே மைதானத்தில் இருந்து ஜிசோ… ஜிசோ என்று சத்தம் கேட்க, டென்னிஸ் மைதானத்திற்கு ஜிசோவை அழைத்து சென்றார் அந்த கிளப் ஊழியர். ”கடைசியில் உலகின் தகுதியான வீரருடன் விளையாடுவதை இங்குள்ளவர்கள் பார்க்க போகிறார்கள்” என்று கூறுகிறார். அப்போது அங்கிருந்த கூடாரத்தின் மறைவில் இருந்து வெளியே வந்தார் ரோஜர் ஃபெடரர்.

இதனைக் கண்ட ஜிசோ, ஒரு நிமிடம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார். சிரித்தபடியே வந்த அந்த ஜாம்பவான், “உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி, நான் உனக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன் இல்லையா… என்ன ரெடியா” என்று ஜிசொவுக்கு கைகொடுத்தார். சுவிட்சர்லாந்தின் குளிரை தாண்டி அந்த சாம்பியன் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற ஜிசோவுக்கு அப்போது தான் புரிந்தது, இவ்வளவு நேரம் தன்னிடம் திருவிளையாடலை நிகழ்த்தியது ரோஜர் பெடரர் என்று!… அதன்பின் ஜிசோவுடன் விளையாடி தான் கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் நிறைவேற்றி உள்ளார்.

நன்றி மிஸ்டர் ஃபெடரர்!

நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 8) 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலகின் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் ரோஜர் ஃபெடரர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்க்ள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது தனக்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டு தனது நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜிசோ. இதுகுறித்து அவர் கூறுகையில், “சாம்பியன்கள் வாக்குறுதி அளித்தால், அதை காப்பாற்றுவார்கள். அதுதான் அவர்களை பலரும் ரோல் மாடலாக பார்க்க காரணம்” என்றார்.

alt="Roger Federer made the dream"

மேலும் சுவிட்சர்லாந்தில் தனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் குறித்தும் கூறியுள்ளார். ”ரோஜர் ஃபெடர்ருடன் அரை நாள் இருந்தேன். அவரது அன்பு, பணிவு, ஆளுமை, தன்னை சுற்றியுள்ளவர்களை கூலாக்கும் திறமை இவையெல்லாம் அவரை இன்னும் மிகப்பெரிய ஆளுமையாக உணர வைக்கிறது.

நாம் ஒரு நல்ல மனிதனாக இல்லாவிட்டால், சிறந்த விளையாட்டு வீரராக இருக்க முடியாது என்பதை அவர் எனக்கு உணர்த்திவிட்டார். நன்றி மிஸ்டர் ஃபெடரர். உங்களது ’பிங்கி வாக்குறுதி’யை காப்பற்றியதற்காக நான் என்றும் நன்றியோடு இருப்பேன்” பிறந்தநாள் வாழ்த்துக்கள் G.O.A.T!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி ஜிசோ

தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஜிசோ, காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி சிறுவன் ஆவார். இவரது தந்தை ஃபரூக், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரஃபியாபாத்தின் டாங்கிவாச்சா பகுதியைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரபல ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் நிதா ஹாஜி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரைச் சேர்ந்தவர். அவர் நியூயார்க்கில் உள்ள தவன்ட் டெக்னாலஜிஸ் (Tavant Technologies) என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “சிறுவன் பிங்கி ப்ராமிஸ்சை காப்பாற்றிய ரோஜர் ஃபெடரர்: அப்படி என்ன செய்தார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *