பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மன அழுத்தத்தால் தமது வாழ்க்கையில் பெருமளவு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா வெல்ல ராபின் உத்தப்பா முக்கிய காரணமாக இருந்தார். இந்தியாவுக்காக உத்தப்பா கடைசியாக 2015 ஆம் ஆண்டு விளையாடினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, கேகேஆர், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பூனே, ராஜஸ்தான் போன்ற ஆறு அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த உத்தப்பா திடீரென்று இந்திய அணியில் இடம் பெறாமல் போனார். இதனால் , கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.
இது குறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து வீரர் கிரஹாம் தார்பே மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்தியை நாம் அறிந்தோம். கிரஹாம் தார்பே மற்றும் பல வீரர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்துள்ளனர். அவ்வளவு ஏன் என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் மன அழுத்தம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளேன்.
மன அழுத்தம் ஏற்பட்டால் நிச்சயம் நமது வாழ்க்கை சீரழிந்து விடும். வாழவே பிடிக்காது என்ற நிலை வந்துவிடும். நமக்கு நாமே ஒரு சுமையாக மதிப்பற்றவன் போல ஒரு உணர்வு நமக்குள் வந்து விடும். நம்மை நேசிக்கும் மனிதர்களுக்கு நாமே சுமையாகி விட்டோமோ? என்று கூட சிந்திப்போம். உங்களுக்கு நம்பிக்கை என்பது கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டது போல் உணர்வீர்கள் .
அப்படிப்பட்ட மன அழுத்தத்தை நான் 2013 ஆம் ஆண்டு பல மாதங்களாக உணர்ந்தேன். படுக்கையை விட்டு என்னால் எழுந்திருக்க கூட முடியாது. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கும். கண்ணாடி முன் நின்று முகத்தை பார்க்கவே எனக்கு தோன்றாது.
அந்த தருணங்களில் தோல்வியுற்ற நபராகவே என்னை கருதினேன். நான் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும், ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று கூட கருதுவேன். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர அனைவரும் மருத்துவர் உதவியை நாட வேண்டும்” என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்