சவுதி ப்ரோ லீக் கிளப்பில் விளையாட சென்று ரொனால்டோ தவறு செய்தது போல், மெஸ்ஸியும் தவறு செய்ய வேண்டாம் என்று பார்சிலோனா முன்னாள் வீரர் எச்சரித்துள்ளார்.
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியை இரண்டு வார காலத்திற்கு பிஎஸ்ஜி கிளப் அணி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு தனிப்பட்ட முறையில் மெஸ்ஸி மேற்கொண்ட பயணத்தின் காரணமாக அவர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது.
அவரது நீண்ட விளையாட்டு கேரியரில் முதல்முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை காரணமாக வரும் 8 மற்றும் 13-ம் தேதி அன்று பிஎஸ்ஜி விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 2021 முதல் 2023 வரையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளது பிஎஸ்ஜி. இதுவரை பிஎஸ்ஜி அணிக்காக 54 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 21 கோல்களை பதிவு செய்துள்ளார்.
பிஎஸ்ஜி அணியுடனான அவரது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் வரும் ஜூனில் முடிவுக்கு வர உள்ளது.

இதற்கிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்று கால்பந்தாட்ட ஜாம்பவனான மெஸ்ஸியையும் தங்களது பக்கம் ஈர்க்க சவுதி அரேபிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
தற்போது 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நாசர் அணியில் விளையாடி வருகிறார்.
அவர் சவுதி அரேபிய கிளப்பான அல் நாசர் அணிக்காக விளையாட மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 5,310 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிஎஸ்ஜி அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மெஸ்ஸியை, சவுதி ப்ரோ லீக் கிளப்பில் இணைப்பதற்கு இந்திய மதிப்பில் சுமார் 3,293 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவுக்குச் சென்று தவறு செய்தது போல், தற்போது சவூதி அரேபியா சென்ற மெஸ்ஸியும் தவறு செய்துவிட வேண்டாம் என்று பார்சிலோனா முன்னாள் வீரர் ரிவால்டோ எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் கால்பந்து உலகின் முன்னணி மற்றும் மூத்த வீரர்களான ரொனால்டோ ரியல் மாட்ரிட்டுக்கும், மெஸ்ஸி பார்சிலானோ அணிக்கும் திரும்பி விளையாடுவதை பார்க்க விரும்புவதாக ரிவால்டோ தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயிலர் ரிலீஸ் தேதி: ரஜினியுடன் மோதுவாரா சிவகார்த்திகேயன்?
“கமலாலயத்துக்கு பதில் ராஜ் பவன்” : ஆளுநரை விமர்சித்த தங்கம் தென்னரசு