இந்தியா வங்கதேசத்திற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இந்தியா சார்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினார்கள். ஜெய்ஸ்வால் நிதானமாக ஆட, ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மன்கள், சொற்ப ரன்களில் அவுட்டாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். ஆனால், இவரும் 56 ரன்கள் எடுத்த நிலையில் நஹித் ரானா வீசிய பந்தில் அவுட்டானார்.
இந்த நிலையில் ஜடேஜாவும், அஸ்வினும் நிதானமாக விளையாடினார்கள். அஸ்வின் 113 ரன்கள் எடுத்து நிலையில் அவுட்டாக, ஜடேஜா 86 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்ஸ் இறுதியில் 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
முதல் இன்னிங்சில் வங்கதேச பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்களும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட் எடுத்தார்கள்.
இதற்கடுத்து விளையாடிய வங்கதேச அணி, இந்தியாவின் அபாரமான பந்துவீச்சைத் தாக்கு பிடிக்க முடியாமல் 149 ரன்களில் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட் எடுக்க முஹமத் சிராஜ், ஆகாஷ் தீப், மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.
இதற்கடுத்து இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ரோகித் சர்மா 5 ரன்களிலும் அவுட்டானார்கள். இதற்கடுத்து வந்த விராட் கோலியும் 17 ரன்களில் அவுட்டானார். இவர்களைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் ரிஷப் பந்தும் நிதானமாக ஆடி, இருவரும் சதமடித்தனர்.
விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மனான ரிஷப் பந்திற்கு இது ஆறாவது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் என்ற தோனியின் சாதனையை பந்த் சமன் செய்தார்.
இதற்கு முன் தோனி மட்டும் தான் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருந்தார். தற்போது ரிஷப் பந்தும் 6 சதங்கள் அடித்து அதை சமன் செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 515 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக வைத்துள்ளது. இரண்டாம் இன்னிங்ஸில் வங்கதேச அணி 56 ரன்கள் எடுத்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”சகுனிகள் வாழும் சமூகத்தில் நியாயவாதியாக இருக்க கூடாது” – ரீசன் சொன்ன ரஜினி
டிஜிட்டல் திண்ணை: நிர்மலா நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!