ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடுவார் என்றும் அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயமடைந்ததால் நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்து வருகிறார் ரிஷப் பண்ட்.
முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தொடர்ந்து சிகிச்சையுடன் ஓய்வெடுத்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கிரிக்கெட் பயிற்சி பெறும் மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்டதும், அவர் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான சொந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசனுக்காக தற்போதே பயிற்சியை தொடங்கியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
கொல்கத்தாவின் சால்ட்லேக்கில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக இரண்டாவது கேம்பஸ் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் மைதானத்தில் அந்த அணியின் இயக்கநர் சவுரவ் கங்குலி தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
நேற்று ரிஷப் பண்ட் வெறுங்காலுடன் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,
”ரிஷப் பண்ட் நல்ல நிலையில் உள்ளார். அவர் வர இருக்கும் ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இடம் பெறுவார்.
அவரும் நாளை வரை முகாமில் பயிற்சி மேற்கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழிநடத்தி வருகிறார்.
இதுவரை 98 போட்டிகளில் 2838 ரன்கள் குவித்துள்ள பந்த், ஐபிஎல்லில் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்டர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரஜினியின் மாஸ்… ஓகே சொன்ன சிம்பு: தேசிங்கு பெரியசாமி பிக் அப்டேட்!