ரிஷப் பண்ட் தங்கள் அணிக்கு தேவை என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து அவருக்குக் காலில் தசை நார் கிழிந்திருப்பதால் மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
காயம் காரணமாக ரிஷப் பண்ட் தொடர்ந்து 8 அல்லது 9 மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
தொடர்ந்து அடுத்த டி20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பண்ட்-ஐ ஐ. பி. எல் தொடருக்கு வரும்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்குத் தேவை.
ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்பு, அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்குத் தேவை.
எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்குத் தயாராகிவிட்டால் போதும். ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும்.
அப்போதிலிருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடன் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்” என கூறியுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் ஐ. பி. எல் போட்டிகளின் போது ரிஷப் கலந்து கொண்டால், அது அவருக்கு உத்வேகமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், 2016 ஆம் ஆண்டு ஐ. பி. எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்குக் கோப்பையை வென்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்
சிகரெட் பிடிக்கும் காளி : இயக்குநர் கைதுக்கு இடைக்கால தடை!
”அவமானப்படுத்திவிட்டார் கலெக்டர்” -முதல்வர் வரை புகார் செய்த மத்திய அமைச்சர் முருகன்