ரிஷப் பண்ட் நெற்றியில் மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற கார், இன்று (டிசம்பர் 30) அதிகாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாகப் பயணித்தவர்கள் உடனடியாக அவரை அந்த காரில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து ரிஷப் பண்ட் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், “இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். காயங்களுடன் அவர் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ராமா சென்டரில் அனுமதிக்கப்பட்டார்.
ரிஷப் நெற்றியில் இரண்டு காயங்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ரிஷப்பின் நிலை சீராக உள்ளது, அவர் இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து காயங்களின் அளவைக் கண்டறியவும், மேலும் சிகிச்சை பெற உள்ளார்.
தற்போது ரிஷப்பிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் எங்களது மருத்துவக் குழு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிலையில் பிசிசிஐ, ரிஷப்பின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
ரிஷப் சிறந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் வாரியம் பார்த்துக் கொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ரிஷப் பண்ட் குணமடைய வேண்டும் என்று சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ”ரிஷப் பண்ட் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: லெட்டர், கடிதம், கடுதாசி… எடப்பாடி- பன்னீரை டெல்லி பந்தாடும் பின்னணி!
20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!