ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இன்று (டிசம்பர் 2) நெஞ்சு வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/TELEMMGLPICT000147453646_trans_NvBQzQNjv4BqqVzuuqpFlyLIwiB6NTmJwauvwQN9t1fP0ffle5vRErs.webp)
இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 7 ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக வர்ணனை செய்து கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் மதிய உணவு இடைவேளையின் போது, ரிக்கி பாண்டிங் நெஞ்சில் லேசான வலி ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். உடனடியாக அவரை ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் லீ கோல்டிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரிக்கி பாண்டிங் உடல்நிலை குறித்து மருத்துவனை தரப்பில் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.
2012-ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். இவர் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 சதம், 62 அரை சதங்கள் உள்பட 13,378 ரன்கள் எடுத்துள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13,704 ரன்கள் குவித்துள்ளார்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/GettyImages-137671057-1024x578.jpg)
இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்கள் ரோட் மார்ஷ், ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் விரைந்து நலம்பெற வேண்டி ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்
குழந்தைகள் ஆபாச வீடியோ: திருச்சி நபர் மீது சிபிஐ வழக்கு!
ஷாக் அடிக்கும் தங்கம் விலை: ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது!