கேரளாவுக்கு முழுக்கு: இனி தமிழ்நாடா? – சஞ்சு சாம்சன் புது முடிவு!

Published On:

| By Kumaresan M

சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் சங்கத்துடன் மோதல் வலுத்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு அவர் தாவப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், கேரளத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

இதையடுத்து, திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர், “விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காததே இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு காரணமாக அமைந்து விட்டது. கே.சி.ஏவில் நடக்கும் அரசியல் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை பாழாக்குகிறது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த கேரள கிரிக்கெட் சங்கம், “சஞ்சு சாம்சன் உரிய விளக்கம் அளிக்காமல் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால், அவரை அணியில் சேர்க்கவில்லை” என்று பதில் அளித்திருந்தது.

இது தொடர்பாக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் கூறுகையில், “பயிற்சி முகாமில் பங்கேற்க முடியாதததன் காரணத்தை சஞ்சு தெரிவிக்கவில்லை. வெறுமனே பயிற்சி முகாமில் பங்கேற்க முடியாது என்று மட்டும்தான் இமெயில் அனுப்பியிருந்தார். மூத்த வீரரான அவர் ஒழுக்கமாக செயல்படவில்லை. இதனால், அணியில் தேர்வு செய்யவில்லை” என்று கூறியுள்ளார். இதையடுத்து, பிசிசிஐ தேர்வாளர்களும் சஞ்சுவை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தற்போது, சஞ்சு சாம்சனுக்கும் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கும் மோதல் வலுத்துள்ளது. தொடர்ந்து, கேரள அணிக்கு முழுக்கு போட்டு விட்டு, தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் அணியில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநில கிரிக்கெட் சங்கமும் சஞ்சு சாம்சனை அரவணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சஞ்சு சாம்சனின் தந்தை விஷ்வநாத் சாம்சன் கூறுகையில், “கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எனது மகனின் வாய்ப்புகளை தடுக்கின்றனர். பயிற்சி முகாமில் பங்கேற்காத சில வீரர்கள் மட்டும் கேரள அணியில் சேர்க்கப்பட்டது எப்படி? எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel