மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
8வது டி20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
இந்த டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த அக்டோபர் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடந்த அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது பயிற்சி ஆட்டம் இன்று (அக்டோபர் 13) பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில், ரோஹித் சர்மா, கோலி, சூர்யகுமார் யாதவ், சாஹல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட் எடுத்தார். ஹர்ஷல் படேல் 2 விக்கெட் எடுத்தார். பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
அதிகபட்சமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்தப் பயிற்சி ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டி20 ஆட்டத்தில் முதல்முறையாக உள்ளூர் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
சீனியர் வீரர்கள் இதில் விளையாடதாலேயே இந்திய அணி தோற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரித்துள்ளனர்.
பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோற்று இருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு குவாஸுலு நடால் அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது.
ஜெ.பிரகாஷ்
இந்திய வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!
பேருக்குதான் நம்பர் ஒன் டீம்: ரவி சாஸ்திரி