கடைசி பந்து… த்ரில் வெற்றி: பெங்களூருவை கலங்கடித்த லக்னோ!

விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 10) இரவு நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

rcb vs lsg ipl 2023 lucknow won by 1 wicket

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளேஸில் – விராட் கோலி இணை களமிறங்கியது.

இந்த இணை நல்ல தொடக்கத்தை அளித்ததோடு 96 ரன்கள் எடுத்து ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விராட் கோலி அரை சதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த டூ பிளேஸிஸ் சற்று அதிரடியாக விளையாடி ரவி பிஷ்னோய் வீசிய ஓவரில் 115 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டார்.

கிளன் மேக்ஸ்வெல் தன்னுடைய பங்கிற்கு அரைசதம் அடித்த நிலையில் 2வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மிரட்டிய டூ பிளேசிஸ் தலா 5 பவுண்டரி சிக்சருடன் 79 ரன்களை குவித்தார். 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கார்த்திக் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு அணி. இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு லக்னோ அணி களமிறங்கியது.

லக்னோ அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் மேயர்ஸ், முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் தீபக் ஹூடா 9 ரன்கள், க்ருனால் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழ்ந்தனர்.

லக்னோ அணி 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 6 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

rcb vs lsg ipl 2023 lucknow won by 1 wicket

தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணிக்கு வெற்றி இலக்கு கேள்வி குறியாக அமைந்தது.

ஆனால் அடுத்ததாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் தெறிக்கவிடும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 50 ரன்களை குவித்து லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த லக்னோ வீரர் என்ற சாதனையையும் இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையையும் முறியடித்து பெங்களூரு ரசிகர்களை கதிகலங்க வைத்தார் நிக்கோலஸ் பூரான்.

மேலும் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த 3வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக யூசுப் பதான், சுனில் நரேன் இருவரும் தலா 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர்.

தொடர்ந்து விளையாடி வந்த அவர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சீராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் நிதானமாக செயல்பட்ட ஆயுஸ் படோனி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் 4 சிக்ஸருடன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கடைசி ஒரு ஓவரில் மட்டும் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ஜெயதேவ் உனட்கட் சிங்கிள் எடுக்க, 2வது பந்தில் மார்க் வுட் 1 ரன்னில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரவி பிஷ்னோய் 3வது பந்தில் டபுள் எடுத்து 4வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 5வது பந்தில் உனட்கட் 9 ரன்னில் அவுட்டானார்.

இதனையடுத்து கடைசி பந்தில் 1 ரன் மட்டும் தேவை என்ற நிலையில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் இறுதியில் 213 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து பெங்களூரு அணியைத் தோற்கடித்தது.

மோனிஷா

கிச்சன் கீர்த்தனா: பைனாப்பிள் ஸ்குவாஷ்!

முத்தம்: மன்னிப்புக் கேட்ட தலாய் லாமா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *