RCBvsSRH : ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் சேர்த்து இவ்வளவு பெரிய ஸ்கோரை (549 ரன்கள்) எட்டியது இதுவே முதல்முறை. ஆனால் அதிலும் தோற்கும் அணியாக ஆர்.சி.பி இருப்பது தான் அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.
இது ஐபிஎல் தொடரில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. மேலும் சில நாட்களுக்கு முன்பு மும்பை அணிக்கு எதிராக குவித்த தங்களது அதிகபட்ச (277) ஸ்கோரையும் முந்தியது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக 8 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.
TRAVIS HEAD – FASTEST HUNDRED BY SRH BATTER IN IPL HISTORY 🤯pic.twitter.com/GvWCPFpRkd
— Johns. (@CricCrazyJohns) April 15, 2024
அவருக்கு அடுத்தபடியாக கிளாசன் 31 பந்துகளில் 7 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்திருந்தார்.
பெங்களூரு அணி பந்துவீச்சில் டோப்லே(68), வைசாக் (64), பெர்குசன்(52) மற்றும் யாஷ் தயாள்(51) ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.
ஆரம்பம் அபாரம்!
தொடர்ந்து 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்கவீரர்களாக விராட் கோலி மற்றும் டூ ப்ளெஸிஸ் களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே சரவெடியாய் பேட்டை சுழற்ற, பவர் பிளேயில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்திருந்தது.
ஆனால் 7வது ஓவரிலேயே நன்றாக ஆடி வந்த விராட் கோலி (42) தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ்(8) ரன் அவுட் அவுட் ஆக, முதல் 10 ஓவருக்குள் படிதார் (9), டூ ப்ளெஸிஸ்(62) மற்றும் சவுரவ் சவ்கான்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி.
எனினும் 6வது விக்கெட்டுக்கு இணைந்த தினேஷ் கார்த்திக் – லாம்ரோர் ஜோடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு அதிரடியாகவும் பேட்டை சுழற்றியது.
இதனால் 14 ஓவரில் 180 ரன்களை பெங்களூரு அணி கடந்திருந்த நிலையில், லாம்ரோர்(19), கம்மின்ஸ் பந்தில் க்ளீள் போல்டாகி வெளியேறினார்.
Take a bow, Dinesh Kartik ! What an innings – you made us realise beating SRH could have been possible 😭
— Manny ✨🦉 (@MaNnY_Lost) April 15, 2024
அந்த நிலையிலும் மறுபுறம் அதிரடியை கைவிடாத தினேஷ் கார்த்திக் பேட்டிங்கால் ஆட்டத்தில் உயிர் இருந்தது.
சதமடித்து அணியை அவர் வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், 19வது ஓவரில் தமிழகத்தை சேர்ந்த நட்ராஜன் பந்துவீச்சில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கடைசி ஓவரில் களமிறங்கிய அனுஜ் ராவத் 4 பவுண்டரிகளை விரட்டிய போதிலும், அது அணியின் வெற்றிக்கு போதவில்லை.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளுக்கு 262 ரன்கள் குவித்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் புள்ளிபட்டியலில் 8 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு ஹைதராபாத் முன்னேறிய நிலையில், தொடர்ச்சியாக 5 தோல்வியை சந்தித்துள்ள பெங்களூரு அணி பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!