தோற்றது டெல்லி: ஆர்.சி.பி. வீரரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

விளையாட்டு

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5வது முறையாக படுமோசமான தோல்வியை சந்திந்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி அணி டாஸ் வென்றதும் யோசிக்காமல் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 50 ரன்கள் குவித்தார். நடப்பு தொடரில் இது அவரது 3வது அரைசதமாகும்.

2 ரன்னுக்கு 3 விக்கெட்

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே ரணகளமாக மாறியது.

முதல் ஓவரின் 4-வது பந்தில் பிரித்விஷா ரன் அவுட்டானார். 2வது ஓவரில் மிட்செல் மார்ஷும் (0), 3வது ஓவரில் யாஷ் துல் (1) அவுட் ஆகி வெளியேறினர்.

ஆக 3 ஓவரில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே நாங்கள் தோற்பது உறுதி என பரிதாபமான ஆட்டத்தை வெளிபடுத்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

எனினும் மனிஷ்பாண்டே 50 ரன்களுடன் ஒருபக்கம் போராடினாலும், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி 5 ஆவது முறையாக படுதோல்வி அடைந்தது. அதேவேளையில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

எனினும் சமூகவலைதளங்களில் ஆர்.சி.பி. வீரரான தினேஷ் கார்த்திக்கை படுமோசமாக ரசிகர்கள் திட்டி வருகின்றனர் . நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் டக் அவுட் ஆன கார்த்திக், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 9 ரன்கள் மற்றும் 1 ரன்னில் வெளியேறினார்.

இன்றைய போட்டியிலாவது ரன்கள் குவித்து பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை (15) டக் அவுட்டாகி முதலிடத்தில் இருக்கும் மந்தீப் சிங்குடன் இணைந்துள்ளார் தினேஷ் கார்த்திக். இதனையடுத்து ஆர்.சி.பி. ரசிகர்களே அவரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆர்.சி.பி அணியை விட்டு வெளியேறி, பழைய பன்னீர்செல்வம் போல் வர்ணனையாளராகவே கிரிக்கெட்டை தொடருமாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 14 முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணாமலை புகார்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு!

அண்ணாமலையை அவாய்ட் பண்ணுங்க: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *