INDvsENG 4th Test : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அடுத்த இரு போட்டிகளில் அபாரமாக வென்று தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 23) காலை ராஞ்சியில் தொடங்கியது.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகிய நிலையில், பிகாரை சேர்ந்த 27 வயதான ஆகாஷ் புதுமுக வீரராக களமிறங்கினார்.
முதல் விக்கெட் ஏமாற்றம்!
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸை இங்கிலாந்தின் க்ராலி மற்றும் பென் டக்கெட் தொடங்கினர்.
மெதுவாக இருவரும் ரன் வேட்டையை தொடங்கிய நிலையில் அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 4வது ஓவரில் தனது சர்வதேச விக்கெட் வேட்டையை தொடங்கினார்.
அவரது பந்து க்ராலியின் மட்டையை ஏமாற்றி ஆஃப் ஸ்டெம்பை சிதறடித்த நிலையில், தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை அவர் கொண்டாடினார். ஆனால் அது நோ பால் ஆக அறிவிக்கப்படவே அவருடன் அணி வீரர்களும் சற்று ஏமாற்றமடைந்தனர்.
https://twitter.com/CricCrazyJohns/status/1760885643214049484
இரண்டு ஓவரில் 3 விக்கெட்!
எனினும் 10வது ஓவரில் ஆகாஷின் பந்து பென் டக்கெட்டின் பேட்டை உரசி துரவ் ஜூரல் கையில் தஞ்சமடைய அவர் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதே ஓவரில் களமிறங்கிய ஒல்லி போப்பை எல்.பி.டபியுள்யூ செய்து டக் அவுட் ஆக வெளியேற்றினார்.
அதற்கு அடுத்த ஓவரில் அதிரடியாக ஆடி வந்த க்ராலியை க்ளீன் போல்டாக்கினார்.
அறிமுக போட்டியின் முதல் நாளிலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆகாஷ் தீப் இன்று கிரிக்கெட் உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
https://twitter.com/BCCI/status/1760897404977512730
சிதைந்த கனவு!
எனினும் ஆகாஷ் தீப் இந்த இடத்திற்கு வர நிறைய வலிகளையும் தடைகளையும் தாண்டியே வந்துள்ளார்.
ஆகாஷின் தந்தை ராம்ஜி சிங் பிகாரில் உள்ள சசரத்தில் ஆசிரியராக இருந்தார். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காத நிலையில் ஆகாஷ் தனது தந்தைக்கு தெரியாமல் சிறு வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
ஆனால் ஆகாஷுக்குள் இருந்த திறமையை கண்டு அவரது மாமா தொடர்ந்து ஊக்கமளித்த நிலையில் 2010ஆம் ஆண்டு பங்காளதேஷில் உள்ள துர்காபூருக்கு சென்று அங்குள்ள உள்ளூர் அகாடமியில் பயிற்சி பெற்றார்.
இதற்கிடையே ஆசிரியராக பணிபுரிந்த வந்த அவரது தந்தை பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். அடுத்த 2வது மாதத்தில் ஆகாஷ் தனது அண்ணனையும் இழந்தார்.
குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஏற்பட்ட வெற்றிடம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அடியோடு புரட்டி போடவே அதிலிருந்து விலகினார்.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிக்சர்!
இதோடு தனது கனவு எல்லாம் முடிந்தது என்ற நினைத்த தருணத்தில், 3 ஆண்டுகளுக்கு பிறகு தனது மாமாவின் துணையுடன் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்தார்.
கொல்கத்தா கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்த அவரை முன்னாள் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ரணதேப் போஸ் அடையாளம் கண்டார். ஆகாஷின் வேகப்பந்துவீச்சை கண்டு வியந்த ரணதேப் தொடர்ந்து அவரை ஊக்குவிக்க பெங்கால் U-23 அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 2019 ஆண்டு ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக களமிறங்கினார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களம் கண்டார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆகாஷ், கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ’இந்தியா ஏ’ அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
பெங்கால் வீரரை கொண்டாடும் பெங்களூரு ரசிகர்கள்!
அதனைத்தொடர்ந்து இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளார் ஆகாஷ் தீப். அந்த முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான க்ராலி, பென் டக்கெட் மற்றும் ஓல்லி போப் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி தனது சர்வதேச பயணத்திற்கு சலாம் போட்டுள்ளார்.
ஆகாஷின் இந்த அதிரடி வருகையை ஆர்.சி.பி ரசிகர்கள் சற்று கூடுதலாகவே கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் ஆகாஷ் தீப் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வருவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முன்னாள் வீரர்களும் ஆகாஷ் தீப்பின் அபார பந்துவீச்சை குறிப்பிட்டு அவருக்கு தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாசெ.க்கள் கூட்டம்: இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்- திண்ணைப் பிரச்சாரத்தைத் துவங்கும் திமுக
IPL: 2008-2023 வரை…வின்னர், ரன்னர்கள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?