போராட்டம் வீண்: சொந்த அணியால் நொந்துகொண்ட விராட்கோலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான நேற்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.
36வது ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இன்னும் காயத்தில் இருந்து ஃபா டூ பிளெஸ்சிஸ் குணமடையாத நிலையில் இந்த போட்டியிலும் கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜேசன் ராய் (56), நிதிஷ் ராணா (48) வெங்கடேஷ் அய்யர்(31), என்.ஜெகதீசன்(27) ஆகியோரின் அதிரடியான பங்களிப்பை கொடுத்தனர்.
தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் 3வது வெற்றியை பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அந்த அணி தரப்பில் சென்னை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 49 ரன்களை வாரி வழங்கிய தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி, இந்த ஆட்டத்தில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதே வேளையில் பெங்களூரு அணியில் 5வது முறையாக விராட்கோலி அரைசதம் அடித்தாலும் அவருக்கு துணையாக ஒரு வீரரும் அணியில் விளையாடவில்லை.
டூபிளெசிஸ் (17), சபாஷ் அஹமத் (2) மற்றும் மேக்ஸ்வெல் (5) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
தொடர்ந்து களமிறங்கிய லாம்ரோர் (34) மற்றும் கடைசி நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் (22) ஆகியோரும் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினர்.
இந்த மோசமான தோல்வி குறித்து போட்டிக்கு பின் விராட் கோலி மிகுந்த வேதனையுடன் பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எங்களது வெற்றியை நாங்களே தாரைவார்த்து விட்டோம். நாங்கள் இந்த தோல்விக்கு தகுதியான அணி தான். நாங்கள் இந்த போட்டியில் பல தவறுகள் செய்து, எங்களை தேடி வந்த வெற்றியை, கொல்கத்தா அணியிடம் நாங்களே கொடுத்துவிட்டோம்.
கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25-30 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம். இந்த போட்டியில் நாங்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பதே உண்மை. ஒரே ஒரு பார்ட்னர்சிப் எங்களுக்கு சரியாக அமைந்திருந்தால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.
ஒரு போட்டியில் வெற்றியடைந்தால், அடுத்த போட்டியில் தோல்வியடைவது வாடிக்கையாகி வருகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்து வருவதால், மற்ற மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அது எங்களுக்கு கடைசி நேரத்தில் கை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல்!