திக் திக் நொடிகள்..கடைசி பந்தில் கலக்கிய ஜடேஜா

விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் 16 வது சீசனின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதைப்போலத்தான் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த தொடரின் பல போட்டிகள் விறுவிறுப்புடன் சென்றது. அப்படித்தான் இந்த தொடரின் இறுதிபோட்டியும் நள்ளிரவு வரை ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்தது.

இதில் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு ரூ.20 கோடி ரொக்கப்பரிசும், 2ம் இடம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

இதற்காகத் தானே இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என்று ரசிகர்களை எண்ண வைத்த இறுதிப்போட்டியில்… சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் ஜடேஜா, ராயுடு, ரஹானே, ஷிவம் துபே.
இவர்கள் அனைவரும் தேவையான நேரத்தில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தனர்.

அதிலும் ஜடேஜாவின் கடைசி இரு பந்துகளில் அடிக்கப்பட்ட சிக்ஸரும், பவுண்டரியையும் சிஎஸ்கே ரசிகர்கள் இனி வாழ்நாளில் எப்போதும் மறக்கமாட்டார்கள் அப்படி ஒரு ஆட்டம் அது.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஷிவம் துபே, ஜடேஜா இருந்தனர். குஜராத் அணியின் பந்து வீச்சாளர் மோகித் சர்மா முதல் பந்தை ஆப்சைடு யார்க்கராக வீச துபே ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் துபே ஒரு ரன் எடுத்து ஜடேஜாவிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார்.

ravindra jadejs best play in csk win

மோகித் சர்மா 3-வது பந்தை லோ-புல்டாஸாக வீச, ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் துபே ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜடேஜாவிடம் வழங்கினார்.

4 பந்துகளிலும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஏதும் அடிக்காமல் இறுக்கமாகச் சென்றதால், சிஎஸ்கே, குஜராத் ரசிகர்கள் இதயத்துடிப்பு எகிறியது. 4 பந்துகளையும் மோகித் சர்மா யார்கர்களாக வீசி ஜடேஜா, துபேவைக் கட்டுப்படுத்தினார்.

ஆனால், 5வது பந்தை மோகித் சர்மா லென்த்தை மாற்றி ஸ்லோ பாலாக வீசியவுடன், இதற்காகத்தானே ஆசைப்பட்டேன் என்பதை போல ஜடேஜா லாங்ஆனில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். மைதானம் முழுவதும் ரசிகர்களின் சத்தம் விண்ணை பிளந்தது.

கடைசிப் பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 4 ரன்களை எடுப்பாரா..சென்னைக்கு கோப்பை கிடைக்குமா..என்ற திக்திக் நொடி உருவாக மோகித் சர்மா லோ-புல்டாசாக லெக்சைடு வீசிய பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு தட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் அனைவரையும் கவனிக்க வைத்தது என்னவென்றால் சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய ஜடேஜா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்…குஜராத் அணிக்காக 96 ரன்களை 47பந்துகள், 6சிக்ஸர், 8பவுண்டரிகள் விளாசிய சாய் சுதர்சன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதே.


மு.வா.ஜெகதீஸ் குமார்

வங்கிக் கணக்கு முடக்கம்: உதயநிதி அறக்கட்டளை விளக்கம்!

ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *