ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜா ஆரம்ப காலங்களில் அதிகப்படியான வாய்ப்பை பெற்று சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
இருப்பினும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளின் பயனாக 2018க்குப்பின் சிறப்பாக செயல்படத் துவங்கிய அவர் 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
இது, அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக மாற்றியது. ஐபிஎல் தொடரில் தோனி பார்மை இழந்த 2020க்குப்பின் அவரது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு சென்னையின் லேட்டஸ்ட் பினிஷராக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த காரணத்தாலேயே இந்த வருடம் சென்னை அணியின் சில போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முக்கிய காரணம் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ஏனெனில் ஆரம்ப காலங்களில் ஜடேஜா மோசமாக செயல்பட்டதால் “எப்போதாவது மட்டும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்” என்று 2019உலகக் கோப்பையின் போது அவர் ட்விட்டரில் ஜடேஜாவை விமர்சித்திருந்தார்.
அதனால் கொதித்தெழுந்த ஜடேஜா, ட்விட்டரில் நேரடியாக காரமான பதிலை கொடுத்தது மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிராக தனது கேரியரை மாற்றிய இன்னிங்ஸ் விளையாடி பதிலடி கொடுத்தார்.
அப்போது முதல் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து ஜடேஜாவை மஞ்ரேக்கர் விமர்சிப்பதும் அதற்கு அடுத்த போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு ஜடேஜா பதிலடி கொடுப்பதும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் போன்ற ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் லெஜெண்ட்ஸ் தொடரில் வர்ணனையாளராக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பணியாற்றி வருகிறார்.
மறுபுறம் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று (செப்டம்பர் 29 )நடைபெற்ற ஒரு லெஜன்ட்ஸ் போட்டியை வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.
அப்போது அப்போட்டியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொகுத்து வழங்கியதை பார்த்து உற்சாகமடைந்த ரவீந்திர ஜடேஜா, “என்னுடைய அன்பான நண்பரை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்ற வாசகத்துடன் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய ட்வீட்டரில் பதிவிட்டார்.
எப்போதுமே ஜடேஜாவை விமர்சிக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சமீபத்திய ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொடுத்த பின் “என் மீது கோபமில்லையே, என்னுடன் பேசுவீர்களா” என்று பேட்டி எடுக்கும்போது ஜடேஜாவிடம் கேட்டார்.
அதனால் நெகிழ்ந்த ஜடேஜா ,“எந்த கோபமுமில்லை, கண்டிப்பாக பேசுவேன்” என்று பதிலளித்து பேட்டி கொடுத்தார்.
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “ஹாஹா, உங்களுடைய அன்பான நண்பன், நீங்கள் விரைவில் களமிறங்கி விளையாடுவதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்” என்று ஜடேஜாவுக்கு பதிலளித்துள்ளார்.
இந்த பதிவுகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிபியை சந்தித்த திருமாவளவன், பாலகிருஷ்ணன்
கொடநாடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!