காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராகவும், ஆல்ரவுண்டராகவும் அறியப்படுபவர் ரவீந்திர ஜடேஜா.
இவரது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததோடு இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியில் முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.
5 மாத இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் அவர் பார்முக்கு வருவதற்கு மிகவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பிசிசிஐ நேர்காணலில் பேசிய அவர், “கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
தொடர்ந்து 5 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் அது மிகவும் வெறுப்பாக இருக்கும். இதனால் இந்தியாவிற்காக விளையாட உடல் தகுதி பெற ஆவலுடன் காத்திருந்தேன்.
உலகக் கோப்பை பின்னர் நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தான் உலகக் கோப்பைக்கு முன்னரே முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கடினமாக இருந்தது. என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. நடக்கக் கூட இயலவில்லை. இருப்பினும், மீண்டும் இந்திய ஜெர்சியினை அணிந்து விளையாட வேண்டும் என்ற உந்துதல் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்தது.
நான் உலகக் கோப்பை டிவியில் பார்த்தபோது, நான் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று பேசினார்.
மோனிஷா
டெல்லி புறப்பட்ட தமிழ் மகன் உசேன்
அதானி விவகாரம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!