“பேருக்குதான் நம்பர் ஒன் டீம்” என இந்திய அணி குறித்து ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
டி 20 உலகக் கோப்பை அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.
புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி தரவரிசையின் படி உலகின் நம்பர் ஒன் டி 20 அணியாக இருக்கிறது.
தற்போது நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டி 20 தொடரின்போது இந்திய பீல்டிங்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் வீரர்களை விட பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டுள்ள இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று சமீப காலங்களாகவே இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற உறுதியான நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் இல்லை.
காரணம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் அடங்கிய அணி நிர்வாகம் மாற்றங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது.
மற்றொன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் பந்து வீசுபவர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் வள்ளலாக ரன்களை வாரி வழங்குகின்றனர்.
ரவி சாஸ்திரி வருத்தம்:
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி A N I செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,
”இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி 20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது.
ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அதில் அற்புதமாக செயல்பட்டு வெற்றியை தீர்மானிக்கும் 10 – 15 ரன்களை மிச்சப்படுத்தி வெற்றி பெறுகிறது.
சமீபத்திய ஆசிய கோப்பையை இலங்கை வெல்வதற்கும் அதுவே காரணம்” என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இதனால் ஹர்திக் பாண்டியா, சூரிய குமார் போன்றவர்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதற்கு எக்ஸ்ட்ராவாக 20 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. இந்திய அணியுடன் கடந்த 6 – 7 வருடங்களாக நான் இருந்துள்ளேன்.
முதலில் பயிற்சியாளராக இருந்த நான், தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.
4 வது இடத்தில் சூர்ய குமார் யாதவ், 5 வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6 வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: பசும்பொன்னில் மோடியா ? பாஜகவுக்குள் வீசும் வாக்கு வங்கிப் புயல்!
கொல்கத்தா போராட்டத்தில் அண்ணா, கலைஞர், ஸ்டாலின்