பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 100 பந்துகள் வீசி ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் சாதனை படைத்துள்ள ரஷீத் கான், இன்று (மார்ச்29) வெளியான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால் ஷதாப் கான் தலைமையில் களம் கண்டது இளம் வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி. அதேவேளையில் 24 வயதான சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தலைமையில் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி.
முதன்முறை வென்ற கோப்பை!
கடந்த 24ம் தேதி புகழ்பெற்ற ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து கடந்த 26ம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி.

இதைத் தொடர்ந்து 27ம் தேதி நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஒரு பவுண்டரி கூட இல்ல..
எனினும் கோப்பையை ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தாத மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளார் கேப்டன் ரஷீத்கான்.

டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் ரஷீத்கான் தனது கடைசி 100 பந்துகளில் எதிரணி வீரர்களை ஒரு பவுண்டரி கூட அடிக்க விடாமல் அபாரமாக பந்துவீசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் யுஏஇ அணிக்கு எதிராக கடைசி 2 போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான், தான் வீசிய கடைசி 100 பந்துகளில் எந்த பவுண்டரியும் கொடுக்கவில்லை. இது சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகவே கருதப்படுகிறது.
மேலும் தனது 101வது பந்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் ரஷீத் கான்.
முதலிடத்தில் ரஷீத்
மேலும் கடந்த 2 தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்களை முழுமையாக வீசியுள்ள ரஷீத்கான் மொத்தம் 7 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து ஐசிசி இன்று வெளியிட்ட டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 710 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் ரஷீத்கான்.
ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 695 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை வென்றதை அடுத்து வரும் 31ம் தேதி தொடங்கும் ஐபில் தொடரில் களமிறங்க உள்ளார் ரஷீத் கான்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஷீத் கான் அந்த அணியின் பெரும் சொத்தாக கருதப்படுகிறார்.
அகமதாபாத்தில் வரும் 31ம் தேதி நடைபெறும் துவக்கப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அபாயகரமான சுழற்பந்து தாக்குதலை ரஷீத் கான் தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா