தற்போது நடைபெற்றுவரும் 2023-24ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில், 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, முஷீர் கானின் அபார இரட்டை சதத்தால் 384 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த பரோடா அணிக்கு சஸ்வத் ராவத் மற்றும் விஷ்ணு சோலங்கி ஆகியோர் சதம் விளாச, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து, 2வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய மும்பை அணி, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஹர்திக் தோமரே 114 ரன்கள், ப்ரித்வி ஷா 87 ரன்கள், சாம்ஸ் முலனி 54 ரன்கள் என அடுத்தடுத்து அதிரடி காட்டினர். இதன் காரணமாக, 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 337 ரன்கள் சேர்த்திருந்தது.
அப்போது, 11வது வீரராக களமிறங்கினார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே.
மும்பை அணியின் இன்னிங்ஸ் விரைவில் முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பந்துகளை பவுண்டரி நோக்கி பறக்கவிட துவங்கினார் துஷார்.
அவருடன் களத்தில் இருந்த 10-வது வீரரான தனுஷ் கொடியானும் பரோடா அணி வீசிய பந்துகளை மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் சிதறடித்தார்.
தங்கள் அதிரடியால் 2 பேருமே சதம் கடந்து, 10-வது விக்கெட்டிற்கு 232 ரன்கள் சேர்த்தனர். துஷார் தேஷ்பாண்டே 123 ரன்களை குவித்திருந்தார். தனுஷ் கொடியான் 120 ரன்களை சேர்த்தார்.
இதன்மூலம், ரஞ்சி கோப்பையில் 10 மற்றும் 11-வது இடங்களில் களமிறங்கி சதம் விளாசிய ‘முதல் ஜோடி’ என்ற வரலாற்று சாதனையை தனுஷ் கொடியான் – துஷார் தேஷ்பாண்டே இணை படைத்துள்ளது.
அதேபோல, கிரிக்கெட் வரலாற்றில் முதல் தர கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைக்கும் 2-வது ஜோடி என்ற பெருமையையும் இந்த ஜோடி பெற்றுள்ளது.
முன்னதாக, 1946-ம் ஆண்டு, சர்ரே அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியாவை சேர்ந்த சந்து சர்வடே மற்றும் சூடே பேனர்ஜி ஆகியோர் 10 மற்றும் 11-வது இடத்தில் களமிறங்கி, சதம் விளாசி சாதனை படைத்திருந்தனர்.
அதேபோல, கிரிக்கெட் வரலாற்றில் கடைசி விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
முதலாவதாக, சர்ரே அணிக்கு எதிரான போட்டியில், சந்து சர்வடே – சூடே பேனர்ஜி இணை 10-வது விக்கெட்டிற்கு 249 ரன்கள் சேர்த்தது.
அவர்களை தொடர்ந்து, 1991-92 ரஞ்சி கோப்பை ஆட்டத்தில், அஜய் சர்மா – மனிந்தர் சிங் இணை பாம்பேவுக்கு எதிரான ஆட்டத்தில் 233 ரன்களை சேர்த்திருந்தது.
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநிலங்களவை தேர்தல் : மாறிய ஒத்த ஓட்டு… கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி!!