இந்திய பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு துறையில் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாததாக மாறி வருகிறது. கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ், வாள் வீச்சு, துப்பாக்கி சுடுதல் என அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த வெற்றிக்கு மேலும் மகுடம் சூட்டக்கூடிய வகையில் 19 வயதான ரமிதா ஜிண்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக இந்தியா 33 பேர் கொண்ட துப்பாக்கி சுடும் குழுவை அனுப்பியது. இதில் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபில் தனி பிரிவில் ரமிதா ஜிண்டால் வெண்கல பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதல் குழு பிரிவில் பங்குபெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
19 வயதில் ரமிதா ஜிண்டால் பெற்றிருக்கும் வெற்றியை பிரதமர் முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
யார் இந்த ரமிதா ஜிண்டால்?
2004-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் லட்வா மாவட்டத்தில் அரவிந்த், சோனிகா தம்பதிகளுக்கு ரமிதா ஜிண்டால் மகளாக பிறந்தார். 13 வயதில் லட்வாவில் உள்ள கரன் ஷூட்டிங் அகாடமியில் அவரது தந்தை சேர்த்து விட்டார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு இதையே தனது கரியராக மாற்றினார் ரமிதா. தினமும் இரண்டு மணி நேர பயிற்சியில் ஈடுபட்டார்.
காலையில் பள்ளி செல்வது மாலையில் பயிற்சி மையத்திற்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தார். இதனால் பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் வென்றார். இதன்மூலம் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்றார். இதனால் உலக போட்டிகளில் பங்கேற்கும் கதவுகள் அவருக்கு திறந்தது.
ரமிதா 19 வயதில் 10 மீ ஏர் ரைபில்ஸ் பிரிவில் உலக அளவில் 11-வது இடத்தில் உள்ளார். 2022-ஆம் ஆண்டு எகிப்து கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். அதே ஆண்டில் பாகுவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தங்கமும், சாங்வானில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார்.
உலக அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரமிதா முக்கிமான இடத்தை தக்கவைத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
ரமிதாவின் வெற்றி குறித்து அவரது தந்தை கூறும்போது, “ரமிதாவின் வெற்றியால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல லட்வா நகரமே பெருமை கொள்கிறது. படிப்பிலும், விளையாட்டிலும் அவர் சிறப்பாகக் செயல்படுவார். வெயிலோ, மழையோ அகாடாமிக்கு சென்றுவிடுவார். அவரது பயிற்சியால் தான் வெற்றி சாத்தியமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் ரமிதா, தான் ஏன், எப்படி துப்பாக்கியை பிடித்து, பதக்கத்தை கைப்பற்றி வருகிறேன் என்பதையும் தெரிவிக்கிறார்.
அவர் கூறுகையில், “தினமும் மூச்சு பயிற்சி, யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். இது எனது கவனச்சிதறலை குறைக்கிறது. உணவுக்கட்டுப்பாடு அவசியம். இதற்காக ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன். பதக்கம் வெல்வதாகற்காக மட்டும் விளையாட்டு துறையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. நிறைய கற்றுக்கொள்வதற்கும் அனுபவங்களை சேகரிப்பதற்காகவும் தான் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் முடிவு என்பது அனுபவமாக உள்ளது. போட்டியில் சிறப்பாக பங்களிப்பதற்காக தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். உலக கோப்பை மற்றும் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையையும் செய்ய முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்.
அவர், மற்ற போட்டிகளில் கிடைத்த அனுபவங்களால் ஆசிய கோப்பை போட்டியில் பதக்கம் பெற்றுள்ளேன். டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் போது அர்ஜூன் மொதுகில் 10 மீ ஏர் ரைபில்ஸ், 50 மீ ஏர் ரைபில்ஸ் என இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். அது எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
தற்போதைய சூழலில் இரண்டு பிரிவுகளிலும் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளதால் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறேன். கண்டிப்பாக 50 மீ ஏர் ரைபில் பிரிவில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவேன். இந்தியாவில் எந்த பெண் வீராங்கனையும் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது கிடையாது. அந்த சாதனையை நான் பெறுவேன்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியும் நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்காகவும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது குடும்பம் விளையாட்டை பின்புலமாக கொண்டது அல்ல. அன்ஜிம் தி, எலா தி, அபினவ் சார் ஆகியோரை பார்த்து தான் துப்பாக்கி சுடுதல் போட்டியை கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரமிதா ஜிண்டாலின் இந்த வெற்றி பல பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இளம் வயதிலேயே பதக்கங்களை குவித்து வரும் ரமிதா ஜிண்டால் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை.
செல்வம்
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி
கொடநாடு விவகாரம் – எடப்பாடி வழக்கு : தனபாலுக்கு தடை!