ஐபிஎல் தொடரில் தனது 200வது ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்ற 37வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
தனது 200வது ஐபில் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் +0.939 ரன்ரேட்டுடன் முதலிடத்தை பிடித்தது.
அதே 10 புள்ளிகளுடன் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ, +0.372 ரன்ரேட்டுடன் 3வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
ஜெய்ஸ்வால் அதிரடி… அதிகபட்சம்!
சொந்த மைதானத்தில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்ததில் இருந்தே அந்த அணியினரிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது.
முதல் ஓவரின் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டத் துவங்கிவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். அதிலும் அந்த அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் சென்னை அணி பவுலர்களுக்கு பயத்தையும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது.
மைதானத்தின் நாலாப்புறமும் பந்தை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 43 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 31 ஆட்டங்கள் ஆடிய ஜெய்ஸ்வாலின் கேரியரில் இது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
முதல் இன்னிங்ஸில் அதிகபட்சம்
நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆடிய ராஜஸ்தான் அணி 202 ரன்கள் குவித்தது.
இது ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக ஆர்.சி.பி அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 197 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
ராஜஸ்தான் அணி ஆதிக்கம்!
கடந்த 2020 ஆண்டு முதல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 7 தடவை மோதியுள்ளன. இதில் 6 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னைக்கு எதிராக தொடர் வெற்றி!
நேற்றைய போட்டியுடன் சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்ற அணியாக ராஜஸ்தான் அணி உள்ளது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், டெல்லி அணி 4 முறையும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2