RR vs DC: 2024 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் நேற்று இரவு (மார்ச் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. முதல் போட்டியில் அபார வெற்றியுடன் ராஜஸ்தான் களமிறங்கியது. மறுமுனையில், பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த டெல்லி, வெற்றியை நோக்கி களம் கண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, பவர்-பிளேவில் டெல்லி அணிக்கு பந்துவீச வந்த கலீல் அகமது, ராஜஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தார். பவர்-பிளேவில் 3 ஓவர்களை வீசிய வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் காரணமாக, பவர்-பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 31 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
அடுத்து பந்துவீசிய அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ், தங்கள் சுழலில் மிரட்ட, 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் அணியின் எண்ணிக்கை 58 ஆகவே இருந்தது.
அப்போது களத்தில் ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங் செய்துகொண்டிருந்த அஸ்வின், 11வது ஓவரில் 2 சிக்ஸ்களை விளாசி அதிரடி காட்ட ஆரம்பித்தார். மறுமுனையில், ரியான் பராக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
14வது ஓவரில் அஸ்வின் 29 ரன்களுக்கு வெளியேற, அந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 93 ஆகவே இருந்தது. ரியான் பராக்கும் 26 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், அதன்பின் தான் துவங்கியது அவரின் ருத்ர தாண்டவம்.
15வது ஓவரில் 14 ரன்கள், 16வது ஓவரில் 10 ரன்கள், 17வது ஓவரில் 7 ரன்கள், 20வது ஓவரில் 25 ரன்கள் என ரியான் பராக் தான் சந்தித்த அடுத்த 19 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். இதன் காரணமாக, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்களை குவித்தது. பராக் 84 (45) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, 12 பந்துகளில் 23 ரன்கள் என அதிரடி துவக்கம் கொடுத்து மிட்சல் மார்ஷ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி பூ டக் அவுட் ஆக, பின் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் & ரிஷப் பண்ட் அணியின் எண்ணிக்கையை சீராக உயர்த்தினர்.
பவர்-பிளேவில் 59 ரன்கள் குவித்த டெல்லி அணி, 10 ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் சேர்த்தது. இவர்கள் 3வது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்திருக்க, டேவிட் வார்னரை 49 ரன்களுக்கு வெளியேற்றினார் ஆவேஷ் கான். பின், யுஸ்வேந்திர சாஹல் ரிஷப் பண்டின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்து வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 44 ரன்கள் விளாசினாலும், களத்தில் அவருக்கு யாரும் துணை நிற்காததால், டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம், 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் தொடர்கிறது. முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
இப்போட்டியில், 6 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்த ரியான் பராக் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்த தொடரில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
’இதாங்க அமித் ஷாக்கு ஸ்கிரிப்ட்’ : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: பாஜகவுக்கு 2 வது இடமா? ஸ்டாலின், எடப்பாடி ஷாக்!