“பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்” என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “நிச்சயமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெற்றால், உலக கோப்பையை வென்று விடலாம்.
இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா இந்திய அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார்.
அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நாம் வெற்றி பெற்றால், இந்திய அணி கவனம் பெறும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும், இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றனர். எனது விருப்பமும் அதுவாகதான் உள்ளது.
பும்ராவிற்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்ந்துள்ள முகமது ஷமி நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷமி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல ஃபார்மில் உள்ளார்.
ஆனால், பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு சரியான மாற்று வீரராக முகமது ஷமியை நான் சொல்ல மாட்டேன்.
அவர்கள் இருவரும் இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிசிசிஐ இந்திய அணியை 15 நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தது ஒரு நல்ல முடிவு.
போட்டி நடைபெறும் மைதானம் பெரிதாக உள்ளது. இந்திய அணி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பயமில்லாமல் விளையாடி, இந்திய அணியின் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்
தன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறார் சோனா
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே வெற்றி!