டி20 உலகக் கோப்பையில் வெற்றி வெற்ற இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்று 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, இந்திய அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டும் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராகுல் டிராவிட் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் டிராவிட்டின் அபாரமான பயிற்சி இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை வடிவமைத்துள்ளது.
அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நுண்ணறிவு மற்றும் சரியான திறமை அணியை மாற்றியுள்ளது.
அவரது பங்களிப்புகளுக்காகவும், அடுத்த தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. ராகுலுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கோலியுடன் பேசிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள மோடி, “இறுதிப்போட்டியில் உங்களது பேட்டிங் திறமை மூலம் இந்திய அணியை நங்கூரம் போல நிலை நிறுத்தியிருக்கிறீர்கள். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்திருக்கிறீர்கள்.
டி20 கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும், ஆனால் நீங்கள் தொடர்ந்து புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித் சர்மாவிடமும் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
“நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களின் அமைதியான மனநிலை, பேட்டிங் மற்றும் கேப்டன்சி இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. உங்கள் டி20 வாழ்க்கை அன்புடன் என்றும் நினைவில் நிற்கும்” என்று கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுவில் கிக் இல்லை… துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா
T20 World Cup: இந்திய அணி வெற்றி – வாழ்த்திய தலைவர்கள்!