ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் இந்தாண்டோடு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக, இன்று(அக்டோபர் 10) அறிவித்துள்ளார்.
களிமண் மைதானத்தின் ராஜா என்று அழைக்கப்படுகிற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், இந்த ஆண்டு நடக்கவிருக்கும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியுடன் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் ” அனைவருக்கும் வணக்கம், நான் டென்னிஸ்லிருந்து ஓய்வு பெறுகிறேன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு வருடம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
என்னால் முழு ஆற்றலுடன் விளையாட முடியவில்லை. சில காலம் யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆரம்பம் உள்ள அனைத்தும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் விதி. அற்புதமான, வெற்றிகரமான என்னுடைய டென்னிஸ் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய கடைசி போட்டியான டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் எனது நாடான ஸ்பெயினுக்காக விளையாடவிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.
ரஃபேல் நடால் ஜூன் 3, 1986 வருடம் ஸ்பெயின் நாட்டின் மேனகோர் நகரத்தில் பிறந்தார். நான்கு வயதிலிருந்து டென்னிஸ் விளையாட ஆரம்பித்தவருக்கு, அவரது மாமா டோனி நடால்தான் ஆரம்ப காலகட்டத்தில் பயிற்சி அளித்தார்.
நடால் 2001 ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், அப்போதைய நம்பர் 1 டென்னிஸ் வீரரான ரோகர் ஃபெடரருடன் போட்டிப் போட ஆரம்பித்தார். இருவருக்கமான போட்டி உலகமே அறிந்த ஒன்றாக மாறியது.
களிமண் மைதானத்தில் விளையாடிய 72 இறுதிப் போட்டிகளில், 63 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடலில் அடிக்கடி ஏற்படும் காயங்களால் தனது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் இன்று தனது ஓய்வை ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கேலி பேசியவருக்கு உதவிய ரத்தன் டாடா : ‘ஜாகுவார்’ ,’லேண்ட் ரோவர்’ வாங்கிய கதை!